சிங்கப்பூரர்களின் நிலையை உயர்த்துவதற்கான வழிகளைப் பட்டியலிட்ட மூத்த அமைச்சர் தர்மன்

உலகளவில் தன்னைப் பேணித்தனம் மிகுந்து பிரிவுகள் அதிகரித்து வரும் நிலையிலும் சிங்கப்பூர் தனது மக்களுக்கான வாய்ப்புகளைப் பெருக்கும்பொருட்டு திறந்தநிலை பொருளியலைத் தொடர்வது அவசியம் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தி உள்ளார். 

“நாம் குடிமக்களுக்குப் போதுமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தராவிட்டால், நமது திறந்தநிலை பொருளியலைக் கட்டிக்காக்க இயலாது. மேலும் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதரவைப் பெறமுடியாது போய்விடும். பொருளியலை உலக நாடுகளுக்குத் திறந்து வைத்திருப்பதும் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புகளை அதிகரிப்பதும் இணைந்தே நடைபெறக்கூடியவை.

“சிங்கப்பூர் ஓர் இரண்டாந்தர வர்த்தக மையமல்ல. மக்கள், வர்த்தகம், முதலீடு போன்றவற்றுக்காக கதவுளைத் திறந்து வைத்திருக்கும் வட்டார, உலக நடுவமாகவே சிங்கப்பூர் திகழமுடியும்,” என்று குறிப்பிட்டார் திரு தர்மன்.

சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான அவர், சிங்கப்பூர் உச்சநிலைக் கூட்டத்தின் ஓர் அங்கமாக ‘புதியதோர் உலகிற்கான எதிர்பார்ப்பு’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசினார்.

உலக நிலவரத்தை ஆராய வர்த்தகத் தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் ஒன்றுதிரட்டக்கூடிய இந்த வருடாந்திர உச்சநிலைக் கூட்டம், கொவிட்-19 சூழல் காரணமாக இம்முறை மெய்நிகர் சந்திப்பாக நடத்தப்பட்டது. 

திரு தர்மன் தமது உரையாடலின்போது சிங்கப்பூரர்களை தலைசிறந்தவர்களாக உருவாக்குவதற்கான சில வழிகளைப் பட்டியலிட்டார். 

“முதலாவது, ஒவ்வொரு திறன்மட்டத்திலும் சிங்கப்பூரர்களை மேம்படுத்துவது. அடுத்தபடியாக, சிங்கப்பூரர்களையும் வெளிநாட்டினரையும் உள்ளடக்கிய வட்டார, உலக ஊழியரணியைக் கொண்ட நிறுவனங்கள் இங்கேயே நிலைபெறும் வகையில் அவற்றை ஊக்கப்படுத்துவது. மூன்றாவதாக, நியாயமான ஆள் நியமனம், பதவி உயர்வு நடைமுறைகளைப் பின்பற்றுவது. வரலாறு காணாத வளர்ச்சிக்குறைவும் பொருளியல் மந்தமும் நிலவுவதால் இந்த அம்சத்தைத் தற்போது அரசாங்கம் மிகுந்த கவனத்துடன் நோக்குகிறது.

“சிங்கப்பூர் சமூகமும் குறைந்த வருமானம் ஈட்டுவோரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு ஊழியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் நியாயமான போட்டித்தன்மையை வளர்ப்பதும் அடுத்தடுத்த வழிகள்,” என்று விவரித்தார் திரு தர்மன்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon