விதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்

விதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்

1 mins read
846cba4c-a286-4071-9e8a-deeffe25b249
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத மேலும் மூன்று உணவு, பானக் கடைகளுக்கு, பத்து நாட்களுக்கு மூட உத்தரவு இடப்பட்டது. மேலும், நான்கு உணவகங்களுக்குத் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மூட உத்தரவிடப்பட்ட வர்த்தகங்களில் புளோக் 261, சிராங்கூன் செண்ட்ரல் டிரைவில் அமைந்துள்ள பானக் கடையும் ஒன்று. அதிகாரிகள் சென்ற சனிக்கிழமை இரவு 10.55 மணிக்கு அங்கு சென்றபோது வாடிக்கையாளர்கள் வெளிப்புற மேசைகளில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைள்) சட்டம் 2020 கீழ், இரவு 10.30 மணிக்கு மேல் மதுபானங்களை விற்கவும் குடிக்கவும் முடியாது.

ஐந்து பேருக்கு மேல் அடங்கிய கும்பலை அனுமதித்தது, அவர்களை ஒன்றாக அல்லது பிரித்து உட்கார வைத்து கலந்துறவாட விட்டது, ஒரு மீட்டர் இளைவெளியின்றி வாடிக்கையாளர்களை அமர வைத்தது போன்ற விதிமீறல்களுக்காக நான்கு கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் தளர்வு தொடங்கியது முதல் இத்துடன் 45 உணவு, பானக் கடைகள் மீது அதிகாரிகள் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். "சிங்கப்பூர் மீண்டும் அதன் வர்த்தகங்களைத் திறப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் அதைப் பொறுப்பான, பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். சமூகத் தொற்றுச் சம்பவங்களும் விபரீதப் பின்விளைவுகளும் உருவாகாமல் நாம் காத்திட வேண்டும்," என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இன்று தம் ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்