கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளான இந்திய ஊழியர் திரு அழகு பெரியகருப்பன், அந்தப் பாதிப்பிலிருந்து விரைவில் விடுபடுவார் என அவரது மருத்துவர் அவரிடம் தெரிவித்தபோதும், தம் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார்.
46 வயதான அந்த ஊழியர் தம் உயிரை தாமாக மாய்த்துக்கொண்டார் என்று மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் இன்று (செப்டம்பர் 25) நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அவரது மரணம் தொடர்பிலான மருத்துவமனையின் மறுஆய்வில் அவரது மரணம் “ஊகிக்கக்கூடியதோ அல்லது தடுக்கக்கூடியதோ அல்ல,” என்று கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி கொவிட்-19 தொற்று சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் திரு அழகு. ஐந்து நாட்களுக்குப் பிறகு அதாவது ஏப்ரல் 23 அன்று மருத்துவமனையின் மூன்றாவது மாடியின் வெளிப்புற படிக்கட்டு தளத்தில் அசைவின்றி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திரு அழகுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தமிழ் பேசுபவர் என்றும் அவர் திரு அழகுவுடன் சற்று உரையாடியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமது பொருளாதார நிலை பற்றியும் சொந்த ஊரில் பிள்ளைகளைப் பற்றியும் திரு அழகு கவலை தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், உயிரை மாய்த்துக்கொள்வது பற்றிய சிந்தனை அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
திரு அழகுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் பிரச்சினைகள் ஏதுமில்லை என்று குறிப்பிட்ட திருவாட்டி கமலா பொன்னம்பலம், அவரது மரணம், “வேண்டுமென்றே உயிரை மாய்த்துக்கொண்ட செயல்,” என்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சிங்கப்பூரில் பணிபுரியும் தனது உறவினரான திரு வீரப்பன் மீனாட்சி சுந்தரத்திடம் கைபேசி வழியாகப் பேசிய திரு அழகு, “என்னுடைய குடும்பத்தையும் உன்னுடையதைப்போல நன்கு கவனித்துக்கொள்,” என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்பில் விரிவாகப் பேச திரு வீரப்பன் முற்பட்டபோது, அனைத்தும் சரியாக உள்ளது என்றும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் திரு அழகு கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு அழகுக்கு வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏதும் இல்லாததால் விரைவில் குணமடைந்து சமூக பராமரிப்பு வசதிக்கு மாற்றப்படும் சூழலில் இருந்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் மருத்துவமனை கழிவறையில் இருந்தபடி, தனக்கு கொரோனா தொற்று இருப்பதால் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புவதாகப் பேசி இரண்டு காணொளிகளை தமது கைபேசியில் பதிவு செய்தார் திரு அழகு. அவ்விரு காணொளிகளும் இன்று நீதிமன்றத்தில் காட்டப்பட்டன.
ஒரு உலோக கொக்கியைப் பயன்படுத்தி, அவரது படுக்கைக்கு அருகில் இருந்த சன்னலைப் பெயர்த்து திறந்து, அதன் வழியே அங்கிருந்து கீழே குதித்துவிட்டார்.
உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்ததாக அவரது உடற்கூறு ஆய்வு தெரிவித்தது. இதயத்தில் பிளவு, மார்புக்கூட்டுக்குள் ரத்தக் கசிவு, உடைந்த விலா எலும்புகள், இடுப்பு, மூளை பரப்பில் ரத்தக் கசிவு உட்பட பல்வேறு காயங்கள் அவருக்கு இருந்ததாகக் கூறப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொவிட்-19 நோயாளிகள் பலருக்கும் அவர்களது தாய்மொழியில் விளக்கங்கள் அளித்த பிறகும்கூட, தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சரியான புரிதல் இல்லாத நிலையில் ‘கருப்பொருள் பிரச்சினைகள்’ இருப்பதாகவும் கூ டெக் புவாட் மருத்துவமனையின் மனநலத் துறையின் தலைவரும், திரு அழகுவின் இறப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்பட்ட குழுவின் தலைவருமான திரு கோ கா ஹோங் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கூ டெக் புவாட் மருத்துவமனையில் உள்ள ஜன்னல்களுக்கு சிலிகோன் பூசப்பட்டுள்ளதாகவும் அதனை உடைத்துத் திறப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் கூறப்பட்டது.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தனிமையை உணராத வண்ணம் கைபேசி, வைஃபை இணைப்பு போன்றவற்றைப் பயன்படுத்த முடிவதும் உறுதி செய்யப்பட்டது.
உதவி தேவைப்படுவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்:
Samaritans Of Singapore: 1800-221-4444
Singapore Association For Mental Health: 1800-283-7019
Migrant Workers’ Centre: 6536-2692
Transient Workers Count Too: 6247-7001
Silver Ribbon: 6386-1928