ஆஸ்திரேலியா, வியட்னாம் வருகையாளர்களுக்கு சிங்கப்பூர் அனுமதி

ஆஸ்திரேலியா, வியட்னாம் வருகையாளர்களுக்கு சிங்கப்பூர் அனுமதி

1 mins read
e012abb5-8762-4670-a4f3-03916f56e656
ஆஸ்திரேலியா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூர் தன் எல்லையை அக்டோபர் எட்டாம் தேதி முதல் திறக்கவுள்ளது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஏஎஃப்பி -

ஆஸ்திரேலியா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூர் தன் எல்லையை அக்டோபர் எட்டாம் தேதி முதல் திறக்கவுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று அறிவித்தது.

இருப்பினும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலிருந்து வருகையளிப்போருக்குத் தொடர்ந்து அனுமதி வழங்கப்படாது.

விரிவான பொதுச் சுகாதாரக் கண்காணிப்புக் கட்டமைப்புகளை ஆஸ்திரேலியாவும் வியட்னாமும் கொண்டுள்ளன. அத்துடன் கொவிட்-19 கிருமிப் பரவலை இரு நாடுகளும் வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.

இதனால் இவ்விரு நாடுகளிலிருந்து வருவோருக்குக் கிருமித்தொற்று இருக்கும் அபாயமும் குறைவு என்று கூறப்பட்டது.

இரு நாடுகளிலிருந்தும் வர விரும்புவோர் முதலில் 'விமானப் பயண அட்டை'க்கு விண்ணப்பிக்க வேண்டும். இன்று விண்ணப்பிப்போர் அக்டோபர் எட்டாம் தேதியன்று சிங்கப்பூரில் தரையிறங்குவர்.

இந்த 'விமானப் பயண அட்டை திட்டம்' கீழ் வருவோர் சுற்றுப்பயணம் உள்ளிட்ட குறுகிய காலப் பயணங்களை மேற்கொள்ளலாம்.

இந்நிலையில் சிங்கப்பூரை அடைந்ததும் வருகையாளர்கள் முதலில் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கிருமித்தொற்று இல்லை என்று உறுதியானதை அடுத்து அவர்கள் தாங்கள் திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

இதற்கிடையே வருகையாளர்கள் இங்கு தங்கியுள்ள காலகட்டத்திற்கு 'டிரேஸ்டுகெதர்' செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்