கொரோனா கிருமித்தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட 64 வயது ஆடவர் நேற்று (அக்டோபர் 12) உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நிரந்தரவாசியான அந்த ஆடவர் கொரோனா கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் மரணம் அடைந்த 28வது நபர். கடந்த மூன்று மாதங்களாக சிங்கப்பூரில் கொவிட்-19 உயிரிழப்புகள் நிகழவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து அவர் இந்தியாவில் பணிபுரிந்து வந்ததாகவும் கடந்த மாதம் 23ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூர் திரும்பியபோது அவருக்கு வசிப்பிடத்திலேயே தங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக இம்மாதம் 4ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. மாண்ட ஆடவரின் குடும்பத்தாருடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனை தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை அது செய்து வருகிறது.
கிருமித்தொற்று காரணமாக இதற்கு முன், 62 வயது ஆடவர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதியன்று மாண்டார்.
நேற்று சிங்கப்பூரில் மேலும் நால்வருக்குக் கிருமித்தொற்று பதிவு செய்யப்பட்டது. சமூக அளவில் பாதிக்கப்பட்ட ஒருவர், ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினர் என்று சுகாதார அமைச்சு கூறியது.
ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்ட இருவருடன் அப்பெண் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டது.
எஞ்சிய மூவரும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 15 பேர் வேறு உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இறந்தனர்.


