சிங்கப்பூரில் பணிப்பெண்ணை வேறு வேலையில் அமர்த்தும் முதலாளிகளுக்கு எச்சரிக்கைக்கு பதில் அபராதம் விதிக்கப்படக்கூடும்

சிங்கப்பூரில் பணிப்பெண்ணை வேறு வேலையில் அமர்த்தும் முதலாளிகளுக்கு எச்சரிக்கைக்கு பதில் அபராதம் விதிக்கப்படக்கூடும்

2 mins read
c8fca101-78c4-4d2a-b189-49f5ddd9ab0b
சட்டவிரோதமாக பணிப்பெண்ணை வேறு வேலையில் அமர்த்தும் முதலாளிக்கு இப்போது $10,000 வரை அபராதம் விதிக்க முடியும். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட்டு வேலை பணிப்பெண்ணை சட்டவிரோதமாக வேறு இடத்தில் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதற்காக எச்சரிக்கப்பட்டு இருக்கும் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படக்கூடும்.

மனிதவள அமைச்சு இதன் தொடர்பில் தன்னுடைய வழிகாட்டி நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்து வருகிறது. மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் நேற்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

பணிப்பெண் தொடர்பான தங்களுடைய பொறுப்புகளை மிக முக்கியமானவையாக முதலாளிகள் கருதவேண்டும் என்று நீ சூன் குழுத்தொகுதி உறுப்பினரான லூயிஸ் இங்கிற்கு அளித்த பதிலில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இருந்தாலும் வீட்டு வேலைப் பணிப்பெண்களைச் சட்டவிரோதமாக வேறு வேலைகளில் ஈடுபடுத்துவதற்குரிய அதிகபட்ச தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

இத்தகைய சட்டவிரோத விவகாரங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே நிலையாக இருந்து வருகின்றன. பணிப்பெண்களைத் தவறாக வேறு வேலைகளில் ஈடுபடுத்தும் முதலாளிகளுக்கான தண்டனை முறை பற்றிய மறுபரிசீலனை குறித்து அக்டோபர் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் திருவாட்டி கான் தெரிவித்து இருந்தார்.

சட்டவிரோதமாக பணிப்பெண்ணை வேறு வேலையில் அமர்த்தும் முதலாளிக்கு இப்போது $10,000 வரை அபராதம் விதிக்க முடியும். கடந்த 2017 முதல் 2019 வரை ஒவ்வோர் ஆண்டும் 16 முதலாளிகளுக்கு $3,300 முதல் $24,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மன்றத்தில் குறிப்பிட்டார்.

முதலாளிகள், வெளிநாட்டுப் பணிப்பெண்கள் நலனில் அக்கறை காட்டும் அமைப்புகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு தரப்புகளையும் கலந்து ஆலோசித்து அமைச்சு தனது வழிகாட்டி நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் திருவாட்டி கான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்