சிங்கப்பூரில் மின்னணுவியல் உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சி; 1,900 வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு

1 mins read
e051a6a1-5eb6-4cd7-be62-85630a930554
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்று பரவல் இருந்தபோதும் சிங்கப்பூரில் மின்னணுவியல் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்தத் துறையில் சுமார் 1,900 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு இன்று (அக்டோபர் 19) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அவற்றில் பெரும்பாலானவை, 'பிஎம்இடி' எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கான தொழில்நுட்பப் பணிகள். இந்தத் துறையில் உற்பத்திப் பொறியாளர்களுக்கான ஊதியம் $1,800 முதல் $3,225 வரையிலானது. பொதுவாக மின்னணுவியல், இயந்திரவியல் துறைப் பொறியாளர்களின் மாத சம்பளம் $4,500 முதல் $6,000 வரையிலானது.

விற்பனை, சந்தைப்படுத்தல் நிர்வாகிகள் போன்ற தொழில்நுட்பத் துறை சாராத பணிகளுக்கான மாத சம்பளம் $2,800 முதல் $8,500 வரையிலானது.

இவற்றைத் தவிர, நிறுவனங்களின் ஏற்பாட்டில் 850 பயிற்சிகளும் 150 பயிற்சி வேலைகளும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்