பெரியவர்களிடமிருந்து சிறுவர்களுக்கு கொவிட்-19 பரவும் அபாயம் மிகக் குறைவு: ஆய்வு

பெரியவர்களிடமிருந்து சிறுவர்களுக்கு கொவிட்-19 பரவும் அபாயம் மிகக் குறைவு: ஆய்வு

2 mins read
e7a77f64-1186-4fc7-b111-7bc4145f7a48
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு பெரியவர்களிடமிருந்து கொவிட்-19 பரவும் அபாயம் மிகவும் குறைவு என கேகே மகளிர் மற்றும் சிறுவர் மருத்துவமனை மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. சிறுவர்களுக்கு நோயெதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பது இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (அக்டோபர் 21) வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, 137 குடும்பத்தினரிடையே நடத்தப்பட்ட ஆய்வில், கொவிட்-19 தொற்று கண்டவர்களுடன் இருந்த சிறுவர்களில் 6.1 விழுக்காட்டினருக்கு தொற்று ஏற்பட்டது.

தாயிடமிருந்து சிறுவருக்கு பரவும் விகிதம் அதிகமாக இருந்தது.

பெரியவர்களிடமிருந்து நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தொற்றுப் பரவல் 1.3 விழுக்காடு மட்டுமே இருந்தது. ஐந்து முதல் 9 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே அந்தப் பரவல் 8.1 விழுக்காடாக இருந்தது. 10 முதல் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே அந்தப் பரவல் 9.8 விழுக்காடாக இருந்தது.

Sars-CoV-2 கிருமி மனித உடலுக்குள் செல்ல காரணமான 'என்ஸைம் 2 ரிசப்டார்' குழந்தைகளின் நாசியில் குறைவாக இருப்பது இந்தப் போக்குக்கு காரணம் என்றும் வயது கூடக்கூட அந்த ரிசப்டாரின் அளவு அதிகரிக்கும் என்றும் அம்மருத்துவமனையின் தொற்று நோய்கள் சேவை ஆலோசகர் டாக்டர் யுங் சீ ஃபு தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று ஏற்பட்ட 39 சிறுவர்களிடையே இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட மற்றோர் ஆய்வில், அவர்களில் 38.5 விழுக்காட்டினருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்பது தெரிய வந்தது. அறிகுறிகள் கொண்டிருந்த சிறுவருடன் ஒப்பிடுகையில், அறிகுறிகள் இல்லாதவர்களின் நிலை மோசமடையவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கிருமித்தொற்று கண்டவர்களில் நான்கு வயதுக்குட்பட்டவர்களில் 75 விழுக்காட்டினரும் ஐந்து முதல் 9 வயதுக்குட்பட்டவர்களில் 53 விழுக்காட்டினரும் 10 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களில் 64 விழுக்காட்டினரும் கிருமித்தொற்று அறிகுறிகள் கொண்டிருந்தனர்.

மிதமான காய்ச்சல், மூக்கில் சளி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கும் வாசனை மற்றும் சுவை உணவிழப்பு போன்ற அறிகுறிகள் அவர்களிடையே தென்பட்டன.

39 சிறுவர்களும் சராசரியாக 15 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்; அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

ஒரு உயர்நிலைப் பள்ளி, இரண்டு பாலர் பள்ளிகளில் கிருமித்தொற்று பரவல் பரிசோதிக்கப்பட்டபோது, சிறுவர்களிடையே கிருமிப் பரவல் இருந்ததற்கான ஆதாரம் இல்லை.

குறிப்புச் சொற்கள்