சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 3) நண்பகல் நிலவரப்படி புதிதாக 9 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,029 ஆகியுள்ளது.
இன்று பதிவான தொற்றுச் சம்பவங்களில் இரண்டு விடுதிகளில் பதிவானவை. உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதிக்குப் பிறகு நேற்று ஒரே ஒருவருக்குத்தான் கொவிட்-19 தொற்று பதிவானது. பிலிப்பீன்சிலிருந்து இங்கு வந்த வேலை அனுமதிச் சீட்டு கொண்ட 34 வயது நபருக்கு நேற்று கொவிட்-19 தொற்று உறுதியானது.
சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள ஹெவன்லி வாங் கடைக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 46.5 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

