உட்லண்ட்சில் கடந்த மாதம் நிகழ்ந்த விபத்தில், வேனிலிருந்து வெளியே விழுந்து, பின்னர் கோமா நிலைக்குச் சென்ற சிறுமி, 11 நாட்களுக்குப் பிறகு நேற்று (நவம்பர் 3) கண் விழித்துப் பார்த்தார்.
நேற்று மாலை 4 மணியளவில் லவ்லின் எனப்படும் அந்தச் சிறுமிக்கு நினைவு திரும்பியதாக, அவரது தந்தை எரிக் டான், 45, நேற்றிரவு தி நியூ பேப்பரிடம் தெரிவித்தார்.
"அவரால் பேசவோ, பதிலளிக்கவோ முடியவில்லை. கண்விழித்துப் பார்த்தார். அவரது உடலின் இடது பக்கத்தை மட்டுமே அவரால் அசைக்க முடிகிறது," என்று குறிப்பிட்டார்.
நேற்று காலை 7.30 மணியளவில் தம் மகளின் உடல் நிலை பற்றி சமூக ஊடகத்தில் பதிவிட்ட திரு டான், மகளின் மூளையில் வீக்கம் குறைந்திருப்பதாகவும் ரத்தக் கட்டுகள் படிப்படியாக கரைந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று திரு டான் குறிப்பிட்டிருந்தார். சிறுமி கேகே மகளிர் மற்றும் சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி இரவு 8 மணியளவில் உட்லண்ட்ஸ் அவென்யூ 12ல் சிறுமியின் உறவினர் ஓட்டிச் சென்ற வேன், ஆடி கார் ஆகியவை மோதியதில் காயமுற்ற நால்வரில் சிறுமியும் ஒருவர்.
சிறுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது, இரண்டு கால்களும் உடைந்தன; அவசர அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது.
அந்த வேனில் லவ்லியின் 6 வயது சகோதரி, 23 வயதான ஒரு மாது, 27 வயதான ஒரு ஆடவர் ஆகிய உறவினர்களும் வேனில் பயணம் செய்தனர். அந்த ஆடவருக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. லவ்லிக்கு காயம் ஏதுமில்லை.
ஆடி காரில் பயணம் செய்த 32 வயது ஆடவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வேனை அபாயகரமாக ஓட்டிச் சென்றதாக திரு டானின் உறவினரான 56 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். போலிஸ் விசாரணை தொடர்கிறது.

