சீன நாட்டவரான சென் பிச்சுன், சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்க மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமது கடப்பிதழில் போலியான முத்திரைகளைப் பதிக்க நண்பரின் உதவியை நாடினார்.
பாலியல் சேவை வழங்கும் தொழிலாளராக இங்கு பணிபுரிவது அவரது நோக்கம். 2016ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி வரை அவர் சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தார்.
பாலஸ்டியர் ஹோட்டல் அறையில் போலிஸ் நடத்திய திடீர் சோதனையில் அவர் பிடிபட்டார்.
இரு குற்றச்சாட்டுகளுக்காக சென்னுக்கு இன்று (நவம்பர் 5) 14 மாத சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் ஆவணங்களில் போலி முத்திரை பதித்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்கினார்.
சென்னின் கடப்பிதழில் 19 முத்திரைகளும் குறுகியகால வருகை அனுமதியை நீட்டிப்பதற்கான விண்ணப்பமும் உள்ளடங்கியதாகவும் அவை அனைத்தும் போலியானவை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி சிங்கப்பூருக்கு சென் வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. சமூக வருகை அடிப்படையில் இங்கு 14 நாட்கள் தங்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் சென் தொடர்ந்து தங்க தம்மால் உதவ முடியும் என்று நண்பர் ஒருவர் அவரிடம் கூறினார். சென் இங்கு தங்குவது சட்டத்திற்கு உட்பட்டு இருப்பதுபோல அதிகாரிகளுக்குத் தோன்ற வைக்க தம்மால் முடியும் என்று அந்த நண்பர் சென்னிடம் சொன்னார்.
செங் இங்கு தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க $200 செலவாகும் என்றும் அந்த நீட்டிப்பு ஏறத்தாழ இரு மாதங்களுக்குச் செல்லுபடியாகும் என்றும் சென்னிடம் அவர் கூறினார். அதற்கு சென் சம்மதம் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்த நண்பர் கைது செய்யப்பட்டு சீனாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அதையடுத்து சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலத்தைத் தொடர்ந்து நீட்டிக்க, அடையாளம் காணப்படாத நபர் ஒருவருடன் சென் ஒப்பந்தத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பாலஸ்டியர் ஹோட்டலில் போலிஸ் நடத்திய திடீர் சோதனையில் சென் பிடிபட்டார்.
சென்னின் சீனக் கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கடப்பிதழில் இருந்த 19 முத்திரைகளும் குறுகியகால வருகை அனுமதியை நீட்டிப்பதற்கான விண்ணப்பமும் போலியானவை என்பதைக் குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் உறுதிப்படுத்தியது.
சிங்கப்பூரில் சென் ஏறத்தாழ மூன்று ஆண்டு, நான்கு மாதங்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கூடுதல் விசாரணையில் தெரியவந்தது.

