சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 6) நண்பகல் நிலவரப்படி புதிதாக 4 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,047 ஆகியுள்ளது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
உள்ளூர் சமூகத்திலோ, விடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை.
நேற்று சிங்கப்பூரில் 7 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
ஒருவர் உள்ளூர்வாசி; குறுகியகால வருகை அனுமதியுடன் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்த அந்த இந்திய ஆடவரின் மனைவி சிங்கப்பூர் நிரந்தரவாசி.
தனிமைப்படுத்தல் வளாகத்தில் இருந்தபோது கடந்த அக்டோபர் 22ஆம் தேதி செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதியானது.
ஆனால், அக்டோபர் 30ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மருந்தகம் ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டார். அவருக்கு டெங்கி காய்ச்சல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
பின்னர், மூச்சுவிட சிரமப்பட்ட அவருக்கு கடந்த திங்கட்கிழமை கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று அவருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட எஞ்சிய அறுவரில் ஒருவர், பிலிப்பீன்சிலிருந்து வந்த 2 வயது சிறுவன். வேறு இருவர், ஈரான், இந்தியாவிலிருந்து திரும்பிய சிங்கப்பூர் நிரந்தரவாசிகள். மற்ற மூவரில் இருவர் இந்தோனீசியாவிலிருந்தும் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்தும் வந்தவர்கள்.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 48 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

