தேசிய சுற்றுப்புற வாரிய அமலாக்க அதிகாரிகளை அரிவாளால் தாக்கிய ஆடவர் கைது

தேசிய சுற்றுப்புற வாரிய அமலாக்க அதிகாரிகளை அரிவாளால் தாக்கிய ஆடவர் கைது

2 mins read
b6144799-c5c3-4cb8-8541-e1f804db151f
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அரிவாள். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை -

தேசிய சுற்றுப்புற வாரிய அமலாக்க அதிகாரிகள் இருவரை கேன்பெரா லிங்க் பகுதியில் நேற்று (நவம்பர் 9) மாலை தாக்கிய ஆடவரை போலிசார் கைது செய்தனர்.

சம்பவ இடத்துக்கு அருகில் ரத்தக் கறை படிந்த அரிவாள் ஒன்றை போலிசார் கைப்பற்றினார்.

இந்தச் சம்பவம் பற்றி நேற்று இரவு 7.30 மணிக்கு போலிசுக்குத் தகவல் கிடைத்தது. 30 வயதான அந்த சந்தேக நபர், தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரி ஒருவரை முகத்தில் குத்தியதாகவும் மற்றொரு அதிகாரியின் கை, கால்களில் அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்குப் போலிசார் சென்று சேரும் முன்பே அந்த ஆடவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அந்த அதிகாரிகள் இருவரும் தேசிய சுற்றுப்புற வாரியத்தில் பணிபுரியும் செர்ட்டிஸ் அமலாக்க அதிகாரிகள். அவர்கள் இருவரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுய நினைவுடன் இருந்தனர்.

சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த போலிஸ் கேமராக்கள், தாக்கப்பட்ட அதிகாரிகள் அணிந்திருந்த கேமராக்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட படங்களிலிருந்து, சம்பவம் நிகழ்ந்த 7 மணி நேரத்துக்குள் சந்தேக நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

அபாயகரமான ஆயுதத்தால் தாக்கி வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக, அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

புகைபிடித்ததற்கு அபராதம் விதித்த அதிகாரிகளை ஆடவர் தாக்கியதாக, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பொதுச்சேவை அதிகாரிகள் மீதான வன்முறை மிகவும் கடுமையானதாகக் கருதப்படும் என்றும் அவர் தம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்