சிங்கப்பூரில் மேலும் 9 பேருக்கு கொவிட்-19; ஒன்று மட்டும் உள்ளூர் சமூகத்தில் பதிவானது

1 mins read
80c57751-2290-4c13-b78f-5aeef6f74cba
ப்டம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மேலும் ஒன்பது பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (நவம்பர் 10) தெரிவித்தது. அவர்களுடன் சேர்த்து, சிங்கப்பூரில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,073ஆக உயர்ந்தது.

புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் எழுவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். எஞ்சியவர்களில் ஒருவர் சமூகத்தில் இருப்பவர், மற்றொருவர் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்.

நேற்று 8 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இங்கு உறுதிசெய்யப்பட்டன. அந்த எண்மரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர்களில் மூவர் இந்தியா, பங்ளாதேஷ், ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய நிரந்தரவாசிகள். ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு வர்த்தகப் பயண அட்டைத் திட்டத்தின்கீழ் 47 வயது ஆடவர் சென்றிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இருவர் தென்கொரியா, பிலிப்பீன்ஸ் நாடுகளிலிருந்து வந்த வேலை அனுமதி அட்டைதாரர்கள்.

இருவர் இந்தோனீசியாவில் இருந்து வந்த வேலை அனுமதிச்சீட்டு உடையவர்கள். எஞ்சிய ஒருவர் இந்தியாவில் இருந்து இங்கு நீண்டகால வருகை அட்டையில் வந்தவர்.

இதற்கிடையே, தோ குவான் தங்குவிடுதியில் இருந்த கிருமித்தொற்றுக் குழுமம் இனி இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 28 நாள்களில் அங்கு புதிதாக எந்தவொரு கிருமித்தொற்றுச் சம்பவமும் பதிவாகவில்லை.

இதுவரை 57,966 பேர் கிருமி பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டனர். இன்னும் 34 பேர் மருத்துவமனைகளிலும் 21 பேர் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்