உலக அளவில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த, சுமார் 200 தடுப்பு மருந்துகளை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அவற்றுள் 44 தற்போது மருந்தகப் பரிசோதனை நிலையை எட்டியுள்ளன; மனிதர்களுக்குச் செலுத்தி அவை பரிசோதிக்கப்படுகின்றன.
ஆய்வில் முன்னணியில் இருக்கும் 5 தடுப்பு மருந்துகள் பற்றிய விவரங்கள் இதோ:
1. லுனார்-கொவ்19 (Lunar-Cov19) தடுப்பு மருந்து:
- டியூக்-என்யுஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த சிங்கப்பூர் ஆய்வாளர்கள் மற்றும் அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆர்க்டியூரஸ் தெராப்டிக்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பு. - ஒருமுறை போட்டாலே செயல்திறன்மிக்கதாக இருப்பதை இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகின்றன என்று சொன்னார் டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்வி நிலையத்தின் பேராசிரியர் ஊய் எங் இயோங். - பாதுகாப்பு மற்றும் மனிதர்களிடையே நோயெதிர்ப்புத் திறன் ஆகிய இரண்டிலும் சாதகமான முடிவுகளையே முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. - இவ்வாண்டு இறுதிக்குள் பல்வேறு நாடுகள், பகுதிகளில் இந்த மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது.
2. பிஎன்டி162b2 (BNT162b2) தடுப்பு மருந்து:
- ஃபைஸர், அபயோஎன்டெக் நிறுவனங்களின் தயாரிப்பு - பெரிதளவில் நடத்தப்படும் பரிசோதனைகளில் இந்தத் தடுப்பு மருந்து, கொவிட்-19 பரவலை 90% திறம்பட தடுப்பதாகத் தெரியவந்துள்ளது. - செயற்கை mRNAவைப் பயன்படுத்தி கிருமிக்கு எதிரான நோயெதிர்ப்பை உருவாக்குகிறது. -அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தத் தடுப்பு மருந்து பயன்பாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல் இந்த மாத இறுதியில் கிடைக்கலாம். -இந்த மருந்தை -70 டிகிரி செல்சியசில் வைத்திருக்க வேண்டியது அவசியம். பெரும்பாலான மருந்தகங்களில் அத்தகைய வசதிகள் இருக்காது. மேலும், அதனை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்வதும் சிரமம். - இந்த மிகக் குறைந்த உறைவெப்பநிலையில் வைத்திருந்தால் ஆறு மாதங்கள் வரை மருந்தை வைத்திருக்கலாம். 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருந்தால், ஐந்து நாட்கள் வரை மட்டுமே மருந்தை வைத்திருக்க முடியும்.
3. mRNA-1273 தடுப்பு மருந்து:
- அமெரிக்க தேசிய சுகாதாரக் கழகங்களுடன் இணைந்து மாடர்னா தெராப்டிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. - கொலம்பியாவின் 30 மாவட்டங்களில் உள்ள 89 இடங்களில் சுமார் 30,000 பேர் இந்த மருந்து பயன்பாட்டுக்கு பதிவு செய்து, மனிதர்கள் மீதான மருந்தின் பரிசோதனை நடைபெறுகிறது. - இரண்டாம் கட்டப் பரிசோதனையில் இருக்கும் இந்த மருந்து கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் பரிசோதிக்கப்படுகிறது.
4. ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பு மருந்து:
- கமேலயா தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுக் கழகத்தின் தயாரிப்பு. - இந்த தடுப்பு மருந்து 90 விழுக்காட்டுக்கும் மேல் திறம்பட செயல்படுவதாக நேற்று ரஷ்யா தெரிவித்தது. -பெரிதளவிலான பரிசோதனைகள் முடிக்கப்படாத நிலையில், இந்த மருந்தை ரஷ்யா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குகிறது. - மாஸ்கோவில் 40,000 பேருக்கு வழங்கி மேற்கொள்ளப்படும் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. ChAdOx1 nCoV-19 தடுப்பு மருந்து
- பிரிட்டனின் ஆஸ்ட்ர ஸெனகா, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பு. - இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. - பல்வேறு நாடுகளில் இந்தத் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்படுகிறது. பிரேசில், இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் சுமார் 50,000 பேர் இந்தத் தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட உள்ளனர். - இந்த மருந்து வலுவான நோயெதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது, அதன் முதல் 2 கட்ட மருந்தகப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. - தலைவலி, அசதி போன்ற அதிக பாதிப்பில்லாத பக்க விளைவுகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

