முதலாளிகள் வேலை வாய்ப்புகளை நியாயமான முறையில் வழங்கும் நடைமுறையைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் MyCareersFuture என்ற தேசிய வேலை இணையவாசலில் புதிதாக மூன்று அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
ஊழியர்களை வேலையில் சேர்க்கும்போது கூடுமானவரையில் பலருக்கும் நியாயமான வாய்ப்புகளை முதலாளிகள் வழங்கும்படி செய்வதே இந்த இணைய வாசலின் முக்கிய நோக்கமாகும்.
மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, நியாயமான, படிப்படியான வேலை நியமன நடைமுறைக்கான முத்தரப்புக் கூட்டணி ஆகியவை கூட்டறிக்கையில் இதைத் தெரிவித்தன.
இணையவாசலில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள், இதர வேலை இணையவாசல்களும் பின்பற்றக்கூடிய தரங்களாகத் திகழ வேண்டும் என்பதும் நோக்கமாகும்.
வேலை வாய்ப்புகள் பற்றி விளம்பரம் செய்யும்போது முதலாளிகள், நியாயமான வேலை நியமன நடைமுறைகள் தொடர்பான முத்தரப்பு வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதை புதிய அம்சங்களில் ஒன்று நினைவுபடுத்தும்.
பாரபட்சமற்ற, நடுநிலையான வேலை விளம்பரங்களை வெளியிடுவதில் இன்னும் சிறந்த முறையில் முதலாளிகளுக்கு புதிய அம்சம் வழிகாட்டும். சாத்தியமான பாரபட்சங்களைப் பற்றி புகார் செய்வதை எளிதாக்கும் ஏற்பாடும் சேர்க்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்து, பொருத்தமான வேலைகள் கிடைப்பதும் சிரமமாக உள்ளது.
இந்தச் சூழலில் சில முதலாளிகள் சிங்கப்பூரர்களிடம் பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்று வேலை தேடும் உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலை இணையவாசலில் புதிய ஏற்பாடுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாரபட்சத்துடன் நடக்கும் முதலாளிகளைக் கண்காணிக்க ஓர் அமைப்பு செயல்படுகிறது. 'நியாயமான பரிசீலனைக் கட்டமைப்பு' என்று குறிப்பிடப்படும் அந்தக் கண்காணிப்பு அமைப்பின் பட்டியலில் புதிதாக 47 முதலாளிகள் சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் ஆட்களை வேலையில் சேர்த்தபோது பாரபட்சமாக நடந்துகொண்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாரபட்சம் தொடர்பில் ஜனவரி முதல் 90 முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகளைத் தற்காலிகமாக மனிதவள அமைச்சு ரத்துசெய்துவிட்டது.

