சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான பெண்களிடையே முற்றிப்போன மார்பகப் புற்றுநோய் கண்டுபிடிப்பு; இளம்பெண்களும் விலக்கல்ல

 மகனுக்கு பாலூட்டிக்கொண்டிருந்தபோது இடது மார்பகத்தில் வலி ஏற்பட்டதை உணர்ந்தார் திருவாட்டி ஓங் லி ஹுய். 

வலி அதிகரித்தது; இடது மார்பகத்தில் ஒரு கட்டியும் தென்பட்டது. 2015ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தப் பிரச்சினைக்காக மருத்துவப் பரிசோதனைக்கு சென்ற அவருக்கு மூன்றாம் கட்ட புற்றுநோய் உறுதிபடுத்தப்பட்டது.

30களில் இருந்த ஓங், எதிர்காலத்தில் வலது மார்பகத்தில் புற்றுநோய் பரவும் அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு, தம் இரு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவெடுத்தார்.

ஆனால், பிரச்சினை அத்துடன் முடியவில்லை. கடந்த டிசம்பரில் பரிசோதித்த அவருக்கு இடுப்பு எலும்பிலும் புற்றுநோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு நான்காம் கட்ட புற்று ஏற்பட்டிருந்தது. எலும்புகள், நுரையீரல்கள், மூளை என உடலின் பல்வேறு பகுதிக்கு புற்று பரவியிருந்தது.

பரிசோதனை முடிவுகளால் அதிர்ந்துபோன 41 வயதான திருவாட்டி ஓங்குக்கு 7, 11 வயதுகளில் இரு மகன்கள் இருக்கின்றனர்.

திருவாட்டி ஓங் மட்டுமல்ல; அவரைப்போல பல பெண்களுக்கு மிகவும் மோசமான நிலையில் புற்று நோய் கண்டுபிடிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

இளம் பெண்களையும் புற்றுநோய் விட்டுவைப்பதில்லை.

சிங்கப்பூரில் பெண்களிடையே காணப்படும் புற்றுநோய்களில் அதிகம் காணப்படுவது மார்பகப் புற்றுநோய்தான். கடந்த 2011 முதல் 2015 வரை 9,634 புதிய மார்பகப் புற்றுநோய் சம்பவங்கள் பதிவாகின. பெண்களிடையே உயிர்க்கொல்லியாக இருக்கும் புற்றுநோய்களிலும் இதுவே முதலிடம் பிடிக்கிறது.

நான்காம் கட்ட மார்பகப் புற்றுநோய் கண்ட நோயாளிகளில் ஐந்தில் நால்வர், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருப்பதில்லை என மருத்துவர் லீ குவெக் எங்கின் குறிப்பு தெரிவிக்கிறது. ஐகான் புற்றுநோய் நிலையத்தில் மூத்த ஆலோசகராக இருக்கிறார் அவர்.

பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் வெகுவாக அதிகரிப்பதால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தின் மருத்துவர் டாக்டர் டிரா டான் குறிப்பிட்டுள்ளார்.

தாமதமான குழந்தைப் பிறப்பு, மது அருந்துவது, புகைபிடிப்பது, சுகாதாரமற்ற வாழ்க்கைமுறை போன்றவை மட்டுமின்றி வயது, இனம், குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருப்பது போன்றவையும் மார்பகப் புற்றுநோய்க்குக் காரணம் என்று கூறப்படுகிரது.

மார்பகம், கழுத்து, அக்குள் போன்ற இடங்களில் கட்டி, மார்பகக் காம்பிலிருந்து திரவம் வடிதல், எலும்பில் வலி, தொடர் இருமல், மூச்சுவிட சிரமப்படுதல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் மார்பகப் புற்றுநோய் கண்டவர்களுக்கு ஏற்படலாம்.

இளம்பெண்களிடையே, அறிகுறிகளே இல்லாமல் போவதும் உண்டு. அதனால், அவர்களுக்கு புற்றுநோய் மிகத் தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுகிறது.

தாமதமாகக் கண்டுபிடிக்கப்படும் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த முடியாமல் போகலாம். அதனால், விழிப்புடன் இருந்து தொடக்கத்திலேயே கண்டுபிடிக்க ஆனதைச் செய்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள் இருவரும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!