கொவிட்-19 கட்டுப்பாடுகளிலிருந்து மூன்றாம் கட்டத் தளர்வுகள் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால், 3 முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நடைபெற்ற அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் மெய்நிகர் சந்திப்பில் தெரிவித்தார்.
"இந்த ஆண்டு இறுதிக்குள் அது நடக்கும் சாத்தியம் உள்ளது. இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அது நடைமுறைப்படுத்தப்படலாம்," என்றார் அவர்.
சிங்கப்பூரில் இரண்டாம் கட்டத் தளர்வுகள் நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சிங்கப்பூரர்கள் மூன்றாம் கட்டத் தளர்வுகளுக்காக காத்திருக்கின்றனர்.
அதிக அளவிலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் உள்ளூர் சமூகத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
பெரிய கிருமித்தொற்று குழுமங்கள் ஏற்படாதவாறு கட்டுப்படுத்த வேண்டும் என்றார் திரு வோங்.
திரு வோங் குறிப்பிட்ட மூன்று முக்கிய அம்சங்கள்: 1. டிரெஸ்டுகெதர் திட்டத்தில் பொதுமக்கள் குறைந்தபட்சம் 70% பங்களிக்க வேண்டும்; தற்போது அது 50 விழுக்காட்டுக்கும் குறைவு. 2. பாதுகாப்பான தூர இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 3. போதிய அளவுக்கு பரிசோதனை வசதிகளைக் கொண்டிருத்தல்.
இவற்றுள் முதல் இரண்டு அம்சங்களில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று திரு வோங் வலியுறுத்தினார்.

