சுற்றுச்சூழல் சேவைத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கும் வேலைக் கண்காட்சி ஒன்று ஹொங் கா நார்த் சமூக மன்றத்தில் நேற்று தொடங்கியது.
நாளை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஏறத்தாழ 21 நிறுவனங்களில் 350க்கும் அதிகமான வேலைகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் 20 விழுக்காடு வேலைகள் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) பிரிவினருக்கானவை.
இந்த வேலைக் கண்காட்சியில் கலந்துகொண்டு நேற்று பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், "கொவிட்-19 சூழலில் பலருக்கும் வேலை நிலவரம் குறித்து கவலை அடைந்துள்ளனர். ஆனால், வளர்ச்சி கண்டுவரும் துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள துறைகளில் சுற்றுச்சூழல் சேவைத் துறையும் ஒன்று," என்று கூறினார்.
இந்த வேலைக் கண்காட்சியில் பங்கேற்கும் பல நிறுவனங்கள், கூடுதலான ஊழியர்களைப் பணி அமர்த்தி தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்த இருப்பதாக டாக்டர் கோர் குறிப்பிட்டார்.
ஊழியரணி சிங்கப்பூர் அமைப்பு வழங்கும் கழிவு மேலாண்மை நிபுணர்களுக்கான தொழில்முறை உருமாற்றத் திட்டத்தின் மூலம் பணியிடைக்கால ஊழியர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளலாம்.

