சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 16) ஐவர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் சேர்த்து, இங்கு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,124ஆக உயர்ந்தது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தொடர்ந்து ஆறாவது நாளாக சிங்கப்பூரில் உள்ளூர் சமூகத்திலோ, ஊழியர் தங்கும் விடுதியிலோ பாதிப்பு இல்லை.
நேற்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மூவரில் இருவர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள். 61 வயதான ஆடவர், 18 வயது இளம்பெண் ஆகியோர் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள். மூன்றாவது நபர், இத்தாலியிலிருந்து வந்த 30 வயது அமெரிக்க பெண். அவர் குறுகிய கால வருகை அனுமதியில் இங்கு பணி நிமித்தம் வந்த பொறியாளர்.
இம்மூவரும் சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
அனைத்துலக அளவில் கொரோனா தொற்றால் 54 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியது.

