சிங்கப்பூரில் நேற்றும் அதற்கு முந்தைய நாளும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் $410,000 மதிப்பிலான போதைப்பொருள்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றினர்; அதன் தொடர்பில் சிங்கப்பூரர் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
ஒரு கிலோவுக்கும் அதிகமான அளவில் 'ஐஸ்' உட்பட போதைப்பொருள்கள், $18,250 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 34 வயது சிங்கப்பூர் ஆடவர் ஜாலான் புசாரில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அவரது மறைவிடத்தில் இருந்த போதைப்பொருள்களும் சிக்கின.
அதே நாளில் 25 வயதான ஆடவர், 19, 24 வயதுகளில் இருந்த இரு பெண்கள் ஆகியோரும் இது போன்ற குற்றங்களைச் செய்த சந்தேகத்தின் பேரில் பாலஸ்டியர் ரோடு பகுதியில் கைதாகினர்.
அந்த ஆடவரின் வாகனத்தில் போதைப்பொருள்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடலில் மற்றொரு 25 வயது சிங்கப்பூரர் ஈசூன் ரிங் ரோடு பகுதியில் கைதானார்.
இவற்றின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.

