ஜூரோங்கில் நேற்று நள்ளிரவுக்குப் பிறகு, வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் முன்னால் இரண்டு மரங்களை மோதித் தள்ளிய லாரியை ஓட்டிச் சென்ற 32 வயது ஆடவரை, மது அருந்திவிட்டு கவனமின்றி வாகனம் ஓட்டியதாக, போலிசார் கைதுசெய்தனர்.
மரங்களின்மீது மோதிய பிறகும்கூட, அந்த 4 மாடி கட்டடத்தின் முன்புறத்தை மோதும் வரை அந்த லாரி தொடர்ந்து நகர்ந்துகொண்டிருந்தது. மரங்கள் அந்த புளோக்கின் முதல்மாடி மீது சாய்ந்ததாகவும் லாரி ஓட்டுநரின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
யுங் ஹோ ரோட்டில் புளோக் 152ல் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அதிகாலை 12.29 மணியளவில் போலிசுக்கு தகவல் கிடைத்தது.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அந்த ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
லாரியின் முன்புறக் கண்ணாடி உடைந்திருந்ததாகவும் அந்தப் பகுதியில் இருந்த பூந்தொட்டிகள் சிதைந்துபோனதாகவும் ஷின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது.

