தீப்பற்றிக்கொண்ட வீட்டில் தம்பதியைக் காப்பாற்றிய நல்லுள்ளங்களுக்குப் பாராட்டு

தீப்பற்றிக்கொண்ட வீட்டில் தம்பதியைக் காப்பாற்றிய நல்லுள்ளங்களுக்குப் பாராட்டு

2 mins read
2ee0cf0d-8b6c-465b-be83-9c6af12d3722
மின்னூட்டம் செய்யப்பட்ட மின் சைக்கிள் ஒன்றே தீ ஏற்பட காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படம்: சாவ் பாவ் -

ஈசூன் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் நான்காவது தளத்தில் உள்ள ஈரறை வீடு கடந்த சனிக்கிழமை திடீரென தீப்பற்றிக்கொண்டது.

உதவி கேட்டு அலறல் சத்தம் கேட்டதும், அந்த புளோக்கில் பணியில் இருந்த நகர மன்ற துப்புரவாளர்கள் மூவர் உடனே உதவி வழங்க முன்வந்தனர்.

திரு யாசின் முகம்மது, 27, திரு பிஸ்வாஸ் முகம்மது வாசிம், 41, அவர்களது மேற்பார்வையாளர் திரு ஹசன் முகம்மது சதாம், 30 ஆகியவர்கள் அந்த மூவர்.

திரு சதாம் எடுத்து வந்த சுத்தியல் ஒன்றைக் கொண்டு மூவரும் அந்த வீட்டின் வாயிலைப் பலவந்தமாகத் திறந்தனர். அப்போது வீட்டில் திரு இஸ்மாயில் சனிஃப் என்பவரும் அவரது மனைவியும் இருந்தனர்.

"எனக்கு காயம் ஏற்பட்டுவிடுமோ என்பது பற்றி நான் யோசிக்கவில்லை. வீட்டில் சிக்கிக்கொண்டவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் நின்றது," என்றார் திரு சதாம்.

அதன் பிறகு நகர மன்ற துப்புரவாளர்கள் மூவரின் முயற்சிக்கு கைகொடுக்க கிராப் ஓட்டுநர்கள் நால்வர் இணைந்தனர். அண்டை வீட்டாரின் உதவியுடன் தீப்பற்றிக்கொண்ட வீட்டின் வாசல் கதவை கிராப் ஓட்டுநர்கள் பலவந்தமாகத் திறந்தனர்.

வீட்டின் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருந்த திரு இஸ்மாயிலின் மனைவியை அவர்கள் உரிய நேரத்தில் காப்பாற்றியதாக நீ சூன் நகர மன்றத் தலைவர் டெரிக் கோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

வீடு தீப்பற்றிக்கொண்டபோது குளித்துக்கொண்டிருந்த திரு இஸ்மாயில், தீயிலிருந்து தப்பிக்க கழிப்பறை சன்னல் மூலம் வெளியேறிவிட்டார்.

தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையிடம் அன்று காலை 9.45 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன் அந்த புளோக்கில் வசிக்கும் 40 குடியிருப்பாளர்கள் தாங்களாகவே வீடுகளைவிட்டு வெளியேறிவிட்டனர்.

திரு இஸ்மாயிலின் மனைவி தீக்காயங்களுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நீ சூன் நகர மன்றப் பேச்சாளர் ஒருவர் இன்று (நவம்பர் 19) தெரிவித்தார். திரு இஸ்மாயில் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக அப்பேச்சாளர் கூறினார்.

தீப்பற்றிக்கொண்ட வீட்டில் இருந்தவர்களைக் காப்பாற்ற உதவிய திரு இஸ்மாயிலின் அண்டை வீட்டார், நகர மன்ற துப்புரவாளர்கள், கிராப் ஓட்டுநர்களுக்கு திரு கோ பாராட்டு தெரிவித்தார். தமது தொகுதியில் உள்ள வலுவான சமூக உணர்வைக் கண்டு தாம் நெகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தீக்கிரையான அந்த வீட்டில் வசிக்கும் தம்பதி, காப்புறுதி கோரவும் அவசரகால நிதியைப் பெறவும் நீ சூன் அடித்தளத் தலைவர்கள் அவர்களுக்கு உதவி வருவதாக திரு கோ தெரிவித்தார்.

மின்னூட்டம் செய்யப்பட்ட ஒரு மின் சைக்கிள்தான் வீடு தீப்பற்றியதற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்