சிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு கொவிட்-19; தொடர்ந்து 10வது நாளாக உள்ளூரில் புதிய தொற்று சம்பவங்கள் இல்லை

சிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு கொவிட்-19; தொடர்ந்து 10வது நாளாக உள்ளூரில் புதிய தொற்று சம்பவங்கள் இல்லை

2 mins read
c39ec032-b2f6-4383-ac8a-b1188c760a38
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 20) நால்வர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் சேர்த்து, இங்கு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,143 ஆக உயர்ந்தது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தொடர்ந்து 10வது நாளாக சிங்கப்பூரில் உள்ளூர் சமூகத்திலோ, ஊழியர் தங்கும் விடுதியிலோ பாதிப்பு இல்லை.

கிருமித்தொற்று அறிகுறிகள் இருந்ததைத் தெரியப்படுத்தாததன் தொடர்பில் 68 வயது சிங்கப்பூர் ஆடவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர் பயணங்களுக்குத் தேவையான நடைமுறைகளை மீறினாறா என்பதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது.

இந்தோனீசியாவிலிருந்து வந்த அவருக்கு நவம்பர் 11ஆம் தேதி முதல் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தாகக் கூறப்பட்டது.

ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை குடிநுழைவு அலுவலகத்தில், தமக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அனைவரும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட சுகாதார அமைச்சு, விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.

நேற்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மூவரில் ஒருவர் இந்தியாவிலிருந்து வந்த நிரந்தரவாசி, ஒருவர் மான்டெனெக்ரோவிலிருந்து இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் பணிபுரிய சிறப்பு வருகை அனுமதியுடன் வந்த சிப்பந்தி, ஒருவர் இந்தோனீசியாவிலிருந்து வந்த வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் நபர்.

சிங்கப்பூரில் இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 56.8 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.35 மில்லியனைத் தாண்டியது.

குறிப்புச் சொற்கள்