சிங்கப்பூர் வழியாக இடைமாற்றச் சேவை விமானங்களை இயக்கும் ஜெட்ஸ்டார்

சிங்கப்பூர் வழியாக இடைமாற்றச் சேவை விமானங்களை இயக்கும் ஜெட்ஸ்டார்

2 mins read
b5bb8b46-9c8d-4bb7-a5d0-4363a42d1852
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பயணிகள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கி வேறு விமானத்தில் மாறிக்கொள்ளும் சேவையை 'ஜெட்ஸ்டார் ஏஷியா' நிறுவனம் வழங்க இருப்பதாக இன்று (நவம்பர் 20) அறிவித்தது.

பேங்காக், ஹோ சி மின் நகர், ஜகார்த்தா, கோலாலம்பூர், பினாங்கு, நோம் பென் ஆகிய ஆறு தென்கிழக்காசிய நகரங்களிலிருந்து புறப்படும் அந்த நிறுவனத்தின் விமானங்கள், டிசம்பர் 1 முதல் சிங்கப்பூர் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய இடைமாற்ற விமானப் பயணங்களை அனுமதிக்கும் நான்காவது விமான நிறுவனம் இது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் எஸ்ஐஏ, ஸ்கூட், சில்க்ஏர் ஆகியவை ஆகஸ்ட் மாதத்தில் இச்சேவையை வழங்கத் தொடங்கின.

இதுபோன்ற இடைமாற்ற விமானப் பயணங்களைத் துவங்குவதன் மூலம் சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்துக்கு ஒரு சிறு உந்துதல் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரில் விமானம் மாறும் பயணிகள், பயணம் முழுக்க தங்களின் கைகளில் வார் ஒன்றை அணிந்திருக்க வேண்டும்.

இதைக்கொண்டு விமான நிலையமும் விமான நிறுவனப் பணியாளர்களும் அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

மேலும் விமானத்தில் அவர்கள் மற்றப் பயணிகளிடமிருந்து முடிந்தவரை மிகத் தொலைவிலேயே அமர வைக்கப்படுவர்.

இருப்பினும் வியட்னாமிலிருந்து வருவோருக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இடைமாற்ற விமானப் பயணங்களை "மீண்டுவரும் விமான நிறுவனத்தில் ஆக்கபூர்வமான ஒரு படி," என்று குறிப்பிட்டார் ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாரா பசுபதி.

இதுவரை சிங்கப்பூரில் இயங்கிவரும் அதன் தொழிலாளர்களில், கால்வாசியினரை நிறுவனம் ஆட்குறைப்பு செய்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்