சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தன

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் சிங்கப்பூர் நீரிணையில் அதிகமான கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

கடந்த வாரம் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களுடன் சேர்த்து இதுவரை 33 கடற்கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 

ஒப்புநோக்க, கடந்த ஆண்டு முழுமைக்கும் சிங்கப்பூர் நீரிணையில் நிகழ்ந்த கடற்கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை 31. 

கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைகளுக்கு எதிரான வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டு அமைப்பு, கப்பல் தொழில்துறைக்கு நேற்று ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டு, சிங்கப்பூர் நீரிணையில் நிகழ்ந்து வரும் கடற்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டது. 

சிங்கப்பூர் தீவுக்குத் தெற்கே அமைந்துள்ள 105 கிலோ மீட்டர் தூரமுள்ள சிங்கப்பூர் நீரிணை, வர்த்தகத்துக்கு ஒரு முக்கிய நீர்பாதையாக விளங்குகிறது. 

அது சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து செல்கிறது. 

இம்மாதம் 17ஆம் தேதி மூன்று கடற்கொள்ளையர்கள் சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த ‘ஏஷியா ஸ்பிரிங்’ எனும் சரக்குக் கப்பலுக்குள் நுழைந்தனர். 

அப்போது கப்பலின் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, சிப்பந்திகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த மூவரும் கப்பலிலிருந்து தப்பித்து விட்டனர். 

சிங்கப்பூர் குடிரயசு கடற்படையின் கடற்துறை பாதுகாப்புப் பணிக்குழு, சிங்கப்பூர் போலிஸ் கடலோரக் காவற்படை ஆகியவற்றுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

அதேபோல், இம்மாதம் 19ஆம் தேதி சீனாவை நோக்கிச் சென்ற ‘எம்டிஎம் ஆம்ஸ்டர்டாம்’ எனும் ரசாயனம் மற்றும் எண்ணெய்க் கப்பலின் பின்புறம் வழியாக கத்திகள் ஏந்திய இருவர் நுழைந்தனர். எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு சிப்பந்திகள் அழைக்கப்பட்டவுடன் அவர்கள் இருவரும் தப்பினர். 

மேற்கூறப்பட்ட இரு கப்பல்களும் பின்னர் எவ்வித தடையுமின்றி சீனாவுக்குத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon