சிங்கப்பூரில் பணிப்பெண்களுக்கு 5 மடங்கு வட்டியில் கடன் கொடுத்த ஆடவருக்குச் சிறை

சிங்கப்பூரில் பணிப்பெண்களுக்கு 5 மடங்கு வட்டியில் கடன் கொடுத்த ஆடவருக்குச் சிறை

1 mins read
7d69a3a5-4533-4d01-ad59-7c632855d0dc
-

குறைந்தது 19 பிலிப்பீன்ஸ் பணிப்பெண்களுக்குச் சட்ட விரோதமாக மாதம் 20% வட்டிக்கு மொத்தம் $8,400 கடன் வழங்கிய ஆடவருக்கு ஈராண்டுகளும் ஆறு வாரங்களும் சிறைத்தண்டனையும் $240,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

கடன்கொடுப்போர் சட்டத்தின்கீழ் அதிகபட்சம் 4% மட்டுமே வட்டி வசூலிக்கப்பட வேண்டும்.

சிங்கப்பூரில் உரிமம் பெறாமல் கடன் கொடுப்பது குற்றம் எனத் தெரிந்திருந்தும் அத்தொழிலில் ஈடுபட்ட டா பூன் டெக், 61, அதன்மூலம் மாதந்தோறும் $1,500 வரை வருமானம் ஈட்டி வந்தார்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களை அவர் இழிசொற்களால் பழித்துரைத்ததாகவும் கூறப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த முடியாவிடில் அவர் கூடுதலாக 16 வாரங்களைச் சிறையில் கழிக்க வேண்டும்.

வட்டித் தொழிலில் டானுக்கு உதவிய அவருடைய காதலியும் பிலிப்பீன்ஸ் பணிப்பெண்ணுமான ஷிர்லி கேன்சினோ யூஸ்டகியோவிற்கு ஏற்கெனவே எட்டு வாரச் சிறையும் $60,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் அவர் தனது சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்