கொவிட்-19: தெம்பனிஸ் மால் கடைத்தொகுதியில் 'சோல் கார்டன்' உணவகம் கால வரம்பின்றி மூடல்

2 mins read
9e76dfef-f82c-49b8-bcc9-9deb656a9ab2
இன்று நண்பகல்வாக்கில் 'கிளீன் சொல்யூஷன்ஸ்' எனும் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர், உயரழுத்தப் பீய்ச்சுக் கருவியுடனும் கிருமிநாசினிக் கரைசல் அடங்கிய கலன்களுடனும் சோல் கார்டன் உணவகத்துக்கு வந்து கிருமிநசினி தெளித்து சுத்தம் செய்தனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வந்து சென்றதை அடுத்து, 'தெம்பனிஸ் மால்' கடைத்தொகுதியில் உள்ள சோல் கார்டன் உணவகக் கிளை கால வரம்பின்றி மூடப்பட்டது.

இன்று முற்பகல் 10.50 மணிக்கு அந்த உணவகத்திற்குச் சென்றபோது, "கடை மூடப்படுகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்," என்ற அறிவிக்கையை அதன் ஊழியர் ஒட்டிக்கொண்டிருந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறியது.

கடைசியாக நேற்று அந்த உணவகம் திறக்கப்பட்டு இருந்தது.

இன்று நண்பகல்வாக்கில் 'கிளீன் சொல்யூஷன்ஸ்' எனும் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர், உயரழுத்தப் பீய்ச்சுக் கருவியுடனும் கிருமிநாசினிக் கரைசல் அடங்கிய கலன்களுடனும் அவ்வுணவகத்தை வந்தடைந்தனர்.

பின்னர் அவ்விருவரும் முழுக் கவச உடை, முகக்கவசம், கை உறைகளை அணிந்துகொண்டு, அந்த உணவகத்தின் உணவு முகப்புகள், சாளரங்கள், மேசைகள், தூண்கள் மீது உயரழுத்தப் பீய்ச்சுக் கருவி மூலம் கிருமிநாசினியைத் தெளித்தனர்.

காசாளர் முகப்பையும் பற்றட்டைச் சாதனம் உள்ளிட்ட பொருள்களையும் அவர்கள் கிருமிநாசினி கொண்டு துடைத்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு அவ்விருவரும் அவ்வுணவகத்தைவிட்டுக் கிளம்பியதாகக் கூறப்பட்டது.

"கிருமிநாசினி தெளிக்கப்பட்டபின், மீண்டும் பாத்திரங்களைக் கழுவுவோம்; மேசைகளையும் தரையையும் துடைப்போம்," என்று அந்த உணவகத்தின் மேலாளர் சொன்னார்.

நண்பகல் உணவுவேளைக்குச் சற்று முன்பாக சோல் கார்டன் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் சிலர், கடை மூடப்பட்டிருந்ததைக் கண்டு திரும்பிச் சென்றனர்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை தம் குடும்ப உறுப்பினர்கள் 12 பேருடன் சென்று அந்த உணவகத்தில் சாப்பிட்ட சேவைப் பொறியாளர் ஒருவர், பின்னர் காய்ச்சல், தொண்டை எரிச்சலால் பாதிக்கப்பட்டார். அதையடுத்து, மருத்துவப் பரிசோதனையில் அந்தச் சிங்கப்பூரர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சிங்கப்பூரில் 16 நாள்களுக்குப் பிறகு சமூகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாமவர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்