பயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக சிங்கப்பூரில் கைதான ஆடவர் பற்றி கூடுதல் விவரங்கள் சேகரிக்கும் பங்ளாதேஷ்

2 mins read
dac475a9-2896-44c0-a00b-ceef3c37eb14
அகமது ஃபைசால். படம்: சிங்கப்பூர் உள்துறை அமைச்சு -

சிங்கப்பூரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 26 வயது பங்ளாதேஷ் கட்டுமான ஊழியர் அகமது ஃபைசாலைப் பற்றி கூடுதல் விவரங்களைச் சேகரிக்க பங்ளாதேஷ் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

டாக்கா மெட்ரோபோலிட்டன் போலிஸ் படையைச் (CTTC) சேர்ந்த பயங்கரவாதத்துக்கு எதிரான மற்றும் நாடுகளுக்கிடையேயான குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர், வெளிநாட்டில் தங்கியிருந்து பங்ளாதேஷில் சந்தேக நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக அறியப்பட்ட "ஃபைசால்" என்ற ஆடவரின் பெயர் அடிபட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

ஆனால் அந்த ஆடவர் சிங்கப்பூரில் வசிப்பது தங்களுக்குத் தெரியாது என CTTC பிரிவைச் சேர்ந்த திரு சைஃபுல் இஸ்லாம் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட நபர்தான் பங்ளாதேஷ் CTTC பிரிவால் தேடப்படும் நபரா என்பதை உறுதி செய்ய கூடுதல் தகவல்களைத் திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஊடகங்களில் செய்தி வெளிவருவதற்கு முன்பு சிங்கப்பூரில் ஃபைசால் கைதானதோ, சிங்கப்பூரிலிருந்து 15 பேர் பங்ளாதேஷுக்கு நாடு கடத்தப்பட்டது குறித்தோ தங்களுக்குத் தகவல் இல்லை என்றார் அவர்.

சிங்கப்பூரில் ஃபைசால் வேலைக்கு வந்த பிறகு 2018ஆம் ஆண்டில் ஐஎஸ் அமைப்பு தொடர்பான தகவல்களை இணையம் வழியாக அணுகினார். அதிலிருந்து அவரது சுயதீவிரவாதப் பயணம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

"ஃபைசாலின் சுய தீவிரவாதம் பிரான்சில் நடந்ததைப் போன்றதா அல்லது அதற்கும் மேற்பட்டதா என்பதை அறிய பங்ளாதேஷ், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது," என்று பங்ளாதேஷ் பயங்கரவாத ஆய்வு நிலையத்தின் தலைவர் சவ்கட் முனிர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்