16 வயது சிறுவன் உட்பட 87 பேர் பிடிபட்டனர்; $400,000 மதிப்பிலான போதைப்பொருள்கள் சிக்கின

2 mins read
b805955e-897b-4621-8f02-da600fc3bd43
படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் தீவு முழுவதும் நவம்பர் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மேற்கொண்ட நடவடிக்கைகளில் 87 பேர் சிக்கினர். ஏறக்குறைய $400,000 மதிப்புள்ள போதைப்பொருட்களும் பிடிபட்டன. ஹெராயின், கஞ்சா, கெட்டமின், எக்ஸ்டசி, போன்றவை அவற்றில் அடங்கும்.

கைதானவர்களில் ஆக இளையவருக்கு வயது 16 என்று இந்தப் பிரிவு தெரிவித்தது. பூன் லே, புவாங்கோக், அல்ஜுனிட் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய சோதனைகள் பற்றிய விவரங்களும் வெளியிடப்பட்டன.

புக்கிட் மேராவில் இருக்கும் அடுக்குமாடி வீடு ஒன்றுக்கு அதிகாரிகள் நவம்பர் 23ஆம் தேதி சென்றபோது இளம் வயது தாய்மார்கள் இரண்டு பேர் போதைப் பொருளைப் புழங்கிக்கொண்டு இருந்தார்கள்.

ஐந்து வயது மற்றும் நான்கு மாதக் கைக்குழந்தையை அருகில் வைத்துக்கொண்டே அவர்கள் இந்தக் காரியத்தைச் செய்தனர்.

அந்த இரண்டு குழந்தைகளும் உறவினர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிடிபட்ட அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

பொங்கோலில் இருக்கும் 'எட்ஜ்ஃபீல்ட் பிளெய்ன்ஸ்' குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் கடந்த வியாழக்கிழமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அங்கு இருந்தவர்கள் வீட்டில் அட்டையால் தடுப்பு சுவர் ஒன்றை ஏற்படுத்தி பொருட்கள் வைக்கும் அறையை மூடி இருந்தனர்.

அந்த அறைக்குள் 25 வயது ஆடவர் ஒருவர் பதுங்கி இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

அங்கிருந்து போதைப் பொருட்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், ஓர் ஆடவரையும் ஒரு மாதையும் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் போதைப்பொருள் சட்டவிரோதமாக புழங்குவதை ஒழிக்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் அதிகாரிகள் 19 ஆண்டுகளில் ஆக அதிகமாக 14.1 கிலோகிராம் ஹெராயினைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்