சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் இரண்டு தனியார் மருத்துவ வாகனச் சேவை நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு புதிய ஏற்பாடு இடம்பெற்றுள்ளது.
அதன்படி, ‘யூனிஸ்ட்ராங் டெக்னாலஜி’ மற்றும் ‘லென்டோர் ஆம்புலன்ஸ்’ ஆகிய அந்த இரண்டு தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ வாகனங்களில் இந்தப் படை சீருடையுடன் அவசர அழைப்புகளுக்குச் செவிசாய்ப்பார்கள்.
அந்த ஊழியர்களுக்கு பலதரப்பட்ட அவசர நிலைகளிலும் எப்படி உடனடியாகச் செயல்பட வேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.
குடிமைத் தற்காப்புப் படை தன்னுடைய செயலாற்றல்களையும் தயார் நிலையையும் மேம்படுத்துவதற்குப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இணக்கம் காணப்பட்டு இருக்கிறது. இது இன்று முதல் நடப்புக்கு வருகிறது.
இரு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள், பெரிய அளவில் ஏற்படக்கூடிய உயிருடற் சேத சம்பவங்கள், ரசாயன, கதிரியக்க, உயிர்கொல்லி ஆயுதங்கள் வெடித்து சேதத்தை உருவாக்கும் சம்பவங்கள் ஆகியவை உள்ளிட்ட சிக்கலான அவசரகாலங்களின்போது உதவிக்கரம் நீட்டும் வகையில் மிகுந்த ஆற்றலுடன் இருப்பார்கள்.
அவர்கள் குடிமைத் தற்காப்புப் படையின் சீருடையில் இந்தப் பணியைச் செய்வார்கள் என்று இந்தப் படை நேற்று அறிக்கையில் தெரிவித்தது.
புதிய ஏற்பாட்டின்படி, தனியார் மருத்துவ வாகனச் சேவை நிறுவனங்கள் இரண்டும் 30 குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ வாகனங்களை இயக்கும் அளவிற்கு ஊழியர்களை வழங்கும்.
குடிமைத் தற்காப்புப் படை அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தேவை எனில் கூடுதல் மருத்துவ வாகனங்களையும் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.