சுடச் சுடச் செய்திகள்

தூண்டுகோலாய் அமைந்த தேக்கா பொம்மைக் கடை; வெளிநாட்டு ஊழியரின் கவிதைக்குப் பரிசு

தேக்காவில் உள்ள ஒரு பொம்மைக் கடைக்குச் சென்று வந்தது, பரிசு பெறும் அளவிற்குச் சிறந்ததொரு கவிதையை எழுத கட்டுமானப் பொறியாளர் ராஜேந்திரன் விஜயகாந்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த 29 வயது விஜயகாந்த், இந்தியா திரும்ப இருந்த தம் நண்பர் ஒருவருடன் அவருடைய மகனுக்குப் பரிசுப் பொருள் வாங்குவதற்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் தேக்காவிற்குச் சென்றிருந்தார்.

புலி, பூனை, பசு, கார் என  அக்கடையில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பலவிதமான பொம்மைகளைக் கண்டதும் இவரது மனத்திலும் தமது குழந்தைப் பருவம் நிழலாடியது.

“என்னையே மறந்து, அந்தப் பொம்மைகளுடன் விளையாடத் தொடங்கிவிட்டேன்,” என்றார் கடந்த ஏழாண்டுகளாகச் சிங்கப்பூரில் இருக்கும் விஜயகாந்த்.

அந்த நிகழ்வால் உந்தப்பட்டு இவர் புனைந்த ‘தேக்காவில் பொம்மை வாங்குபவன்’ எனும் கவிதை, வெளிநாட்டு ஊழியர் கவிதைப் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இந்தக் கவிதைப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை முதல் பரிசுக்கான ரொக்கம் 500 வெள்ளியில் இருந்து 1,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டது.

தமது கவிதை முதல் பரிசு வென்றதைத் தம்மால் நம்பவே முடியவில்லை எனக் கூறிய விஜயகாந்த், பரிசுத்தொகையைக் கொண்டு என்ன செய்வதென்றும் தெரியவில்லை என்றும் சொன்னார்.

இருப்பினும், தமது சொந்த ஊரிலுள்ள, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விச் செலவிற்குக் கைகொடுக்கும் அறப்பணி அமைப்புகளுக்கு அதை நன்கொடையாக வழங்குவது குறித்து சிந்தித்து வருவதாக இவர் தெரிவித்தார்.

மற்ற எல்லாரையும் போலவே, கொவிட்-19 பரவலால் தாமும் அச்சமும் கவலையும் அடைந்ததாகக் கூறிய இவர், சக ஊழியர்கள் சிலர் தங்களது விடுதிகளைவிட்டு வெளியேற முடியாததை அடுத்து, கூடுதல் நேரம் வேலை செய்து வருவதாகவும் கூறினார்

தமது 16 வயதில் இருந்து கவிதை எழுதி வந்தாலும் அதை மறைத்து வைத்து விடுவதாகக் குறிப்பிட்ட விஜயகாந்த், “அன்பு மட்டுமல்ல, நான் பார்க்கும் எல்லாவற்றுக்காகவும், பறக்கும், கவலையுறும், இறக்கும் உயிர்களுக்காகவும், மழை, மேகம், வண்டு, மொட்டு, உதிர்ந்த மலர் என எல்லாவற்றுக்காகவும் நான் கவிதை புனைவேன்,” என்றார்.

என்றேனும் ஒருநாள் தமது கவிதைத் தொகுப்பு வெளியாகும் என நம்பும் இவர், “கவிதை எழுதுவதில் முதிர்ச்சி பெற்றுவிட்டேனா எனத் தெரியாது. ஆனால், எழுத வேண்டும் எனும் வேட்கை எப்போதும் என்னுள் இருந்து வருகிறது,” என்றும் சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon