கட்டணச் சேவைகளை வழங்கிய ஜெர்மனியின் வயர்கார்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய சிங்கப்பூர் கணக்கியல் நிறுவனத்தின் இயக்குநர் மீது மேலும் மூன்று மோசடிக் குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் அமலாக்க அமைப்புகள் சுமத்தி உள்ளன.
சிட்டாடேல் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு ஆர். சண்முகரத்னம், தனது நிறுவனத்தின் போலிக் கடிதங்களைக் கொண்டு தனது நிறுவனம் மூன்றாம் தரப்பு பணப் பரிவரித்தனை சேவைகளை நடத்துகிறது என்று கூறியதன் தொடர்பில் அந்த மூன்று கூடுதல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
அந்தக் கூடுதல் குற்றச்சாட்டுகளில் திரு சண்முகரத்னம், 377.5 மில்லியன் யூரோ ($611 மில்லியன்) மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று புளூம்பர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் குற்றச்சாட்டுகளையும் சேர்த்து அவர் மொத்தம் 14 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கு கிறார்.
அந்த மோசடிகளின் மொத்த மதிப்பு 1.2 பில்லியன் யூரோ என்றும் கூறப்பட்டது.


