நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) அதன் மாணவர் தங்கும் விடுதியில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 நோய்த்தொற்றுப் பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள இருக்கிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 4 முதல் 15ஆம் தேதி வரை வாரநாட்களில் பரிசோதனை நடத்தப்படும் என்று என்டியு நேற்று தெரிவித்தது.
சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினருக்கு கொவிட்-19 பரிசோதனையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைவதாக என்டியு கூறியது.
இதை அறிவிப்பதற்கு முன்பு கல்வி, சுகாதார அமைச்சுகளுடன் தான் ஆலோசனை நடத்தியதாக என்டியு சொன்னது.
"மாணவர் தங்கும் விடுதியில் வசிப்பவர்களிடம் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்துவதன் மூலம் தொற்று உறுதி செய்யப்படுவோரை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும்," என்று என்டியு விவரித்தது.
"தொற்று உறுதியானால் மாணவர்களுக்கான என்டியுவின் காப்புறுதித் திட்டத்தின்கீழ் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்," என்றும் அது தெரிவித்தது.


