சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான 50 ஆண்டு இருதரப்பு அரசதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் கலப்பு பானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
'சிம்ஹ இன்ஃபியூஷன்' எனும் அந்தப் பானத்தை உருவாக்கியவர், 2001ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த திருமதி நிலுஷிக்கா சில்வா ஜெயவீரா.
பின்னர் அந்த இலங்கை பெண்மணி 'நிலு டீ' எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கினார்.
தமது நிறுவனமும் சிங்கப்பூர் நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய இந்தக் கலப்பு பானம் சிங்கப்பூர், இலங்கை இருதரப்பு உறவின் 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட தேர்வு பெற்றிருப்பது குறித்து பெருமை கொள்கிறார் திருமதி நிலுஷிக்கா.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தற்காப்பு, வெளியுறவு ஆகியவற்றுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திரு விக்ரம் நாயர், இரு நாடுகளின் நீண்டகால உறவின் பிரதிபலிப்பாக 2018ல் இரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக உடன்பாடு கையெழுத்தானதைச் சுட்டினார்.

