விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன

விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன

1 mins read
c9162a2c-d0ad-434a-9049-af5f4e38c881
படம்: சாவ் பாவ் -

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொவிட்-19 சூழலில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படுகின்றன.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது விடுப்பு நாள்களில், அனுமதிக்கப்பட்ட விடுதிகளில் இருக்கும் பொதுவான சமையல் கூடங்களில் விரும்பிய உணவைச் சமைத்துக்கொள்ள இயலும்.

விடுதி நடத்துநர்கள் அனுமதித்தால், ஊழியர்கள் உடற்பயிற்சிக் கூடம், கூடைப்பந்து மைதானம் உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளையும் பயன்படுத்தலாம்.

இந்தத் தளர்வுகள் கடந்த மாதத்திலிருந்து தொடங்கின. அதிகாரிகள் எடுத்த அளவிடப்பட்ட அணுகுமுறையின் அங்கமாக இவை அமைந்துள்ளன.

விடுதிகளில் கொவிட்-19 சம்பவங்கள் மீண்டும் தோன்றக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த பாதுகாப்பான அணுகுமுறை பின்பற்றப்படுவதாக மனிதவள அமைச்சின் 'உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாடு' (ஏஸ்) குழுவின் தலைவர் டுங் யுய் ஃபாய் நேற்று (டிசம்பர் 10) தெரிவித்தார்.

விடுதிகளில் வசிக்கும் சுமார் 300,000 ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அண்மைய மாற்றங்களுக்குப் பிறகும்கூட, ஊழியர்கள் வேலைக்குச் செல்லும் நேரம் தவிர, பெரும்பாலான நேரங்களில் விடுதிகளிலேயே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால், விடுப்பு நாள்களில் அவர்கள் குறிப்பிட்ட பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம்.

விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் சமூகத்துடன் இணைவதற்கான நடவடிக்கைகள் உரிய நேரத்தில், உரிய சூழலில் எடுக்கப்படும் என்று கூறிய திரு டுங், அதற்கான கால வரையறை எதையும் குறிப்பிடவில்லை.

குறிப்புச் சொற்கள்