வீட்டில் இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அதை மீறி வெளியே சென்றனர் இருவர். அதில் ஒருவருக்குப் பின்னர் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
நீதிமன்றத்தில் நேற்று நூருல் அஃபிகா முகம்மது, முகம்மது நூர் சலாம் முகம்மது யூசோஃப் ஆகிய இருவர் மீதும் தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
'பபுல் டீ' பானம் வாங்க சென்றார்
ஆஸ்திரேலியாவிலிருந்து மார்ச் 21ஆம் தேதியன்று சிங்கப்பூர் வந்த நூருலுக்கு மார்ச் 21 முதல் ஏப்ரல் 4 வரையிலான வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் மார்ச் 22ஆம் தேதியன்று அருகில் இருந்த கடை ஒன்றுக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான் போன்ற பொருட்களை வாங்கச் சென்றார். பின்னர் 23ஆம் தேதியன்று 'பபுல் டீ' வாங்குவதற்காக பேருந்து ஒன்றில் ஏறி காஸ்வே பாயிண்ட் பேரங்காடிக்குச் சென்றார். அதையடுத்து மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க தனியார் வாடகை வாகனத்தில் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு சவாரி செய்தார்.
நண்பரின் திருமண வேலைகளில் உதவச் சென்றார்
அதையடுத்து, ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் மறுபடியும் வீட்டிலிருந்து வெளியேறி தன் நண்பரின் திருமண வேலைகளில் உதவ பொங்கோல் ஃபீல்டுக்குச் சென்றார் நூருல். இரு தினமும் நண்பரின் குடும்பத்தார் கூடவே இருந்தனர். பலமுறை தனது வீவக புளோக் கீழ்த்தளத்தில் நின்று நூருல் புகைப்பிடித்தார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று உடல்நலமில்லாமல் போன நூருல், மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது அவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நூருல் தாதியாகப் பணிபுரிந்தார் என்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்குக் கிருமி தொற்றியுள்ளது என்றும் அறியப்படுகிறது.
பொதுப் போக்குவரத்தில்பயணம் செய்தார்
வீட்டில் இருப்பதற்கான உத்தரவை மீறிய மற்றொருவர் மலேசியாவிலிருந்து மார்ச் 26ஆம் தேதியன்று திரும்பிய சிங்கப்பூரர் நூர், 40. வந்த நாள் தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலையில் அதை மீறி உட்லண்சிலிருந்து சுவா சூ காங்கில் உள்ள தன் தாயாரின் வீட்டுக்கு பொதுப் போக்குவரத்தில் நூர் பயணம் செய்தார்.
அத்துடன் சுவா சூ காங் அக்கம்பக்க காவல் நிலையம், சுவா சூ காங் வீவக அலுவலகம், லிம்பாங் உணவங்காடி, லிம்பாங் பேரங்காடி போன்ற இடங்களுக்கும் அவர் சென்றிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட நூருல், நூர் இருவரும் மீண்டும் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லஸாரஸ் தீவு ஒன்றுகூடலில் பங்கேற்ற பெண்ணுக்கு அபராதம்
இதற்கிடையே லஸாரஸ் தீவில் நடந்த ஒன்றுகூடல் ஒன்றில் மேலும் ஒருவருக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 கிருமிப் பரவல் நிலையில் ஐவருக்கு மேல் ஒன்றுகூடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தும் அதை மீறி 12 பேர் ஒன்றுகூடினர். அதில் 31 வயது வியட்நாமியர் லுவோங் தி து ஹாவும் ஒருவர். கட்டுப்பாடுகளை மீறி ஒன்றுகூடலில் பங்கேற்றதற்காக நிரந்தரவாசியான அவருக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று நடந்த அந்த ஒன்றுகூடலில் 12 பேரும் கப்பலில் செயிண்ட் ஜான்ஸ் தீவுக்குச் சென்று, அங்கிருந்து லஸாரஸ் தீவுக்கு நடந்து, பல்வேறு நடவடிக்கைகளில் அங்கு ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

