சிங்கப்பூர் நிறுவனமான டைசன் தயாரித்துள்ள கொவிட்-19 கிருமிக்கான எதிர்ப்பாற்றல் மருந்தின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது.
கொரோனா கிருமித்தொற்றுள்ள 1,305 நோயாளிகள் இம்மருந்தைச் சோதித்துப் பார்க்க முன்வந்துள்ளனர்.
இந்தப் பரிசோதனை வெற்றிபெற்றால் சுகாதார அறிவியல் ஆணையம், மற்ற மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றிடம் TY027 எனும் இம்மருந்து ஆய்வுக்கு அனுப்பப்படும். பின்னர் அந்த மருந்து, கிருமித்தொற்றுச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும். அக்டோபரில் இறுதிக்கட்ட சோதனைகளைத் தொடங்க காதார அறிவியல் ஆணையம் டைசனுக்கு அனுமதியளித்தது.
சோதனைகளை மேற்கொள்ள சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவை டைசனுடன் இணைந்துள்ளன. சாங்கி பொது மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை ஆகியவை பொருத்தமான நோயாளிகளை பங்கேற்க பரிந்துரைக்கக் கூடும்.
ஜூன் மாதம் தொடங்கிய ஆறு வார முதல்கட்ட சோதனையில் 23 பேர் பங்கேற்றனர். அது வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முந்தைய சோதனைகளைப் போலன்றி, மூன்றாம் கட்டமானது இஸ்ரேலில் உள்ள ஷெபா மருத்துவ மையம் உள்ளிட்ட வெளிநாட்டு நோயாளிகளையும் உள்ளடக்கும்.
இந்த எதிர்ப்பு மருந்தை உருவாக்கத்தில் தற்காப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு, பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆகியவை பல்வேறு அமைப்புகள் டைசனுடன் இணைந்துள்ளன.

