ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படை பயிற்சி நடத்தி வருவதில் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக, அம்மாநிலத்தின் பயிற்சித் தள மேம்பாட்டில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை சிங்கப்பூர், ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வை அனுசரிக்க சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் லிண்டா ரேய்னல்ட்ஸும் மெய்நிகர் வழியாக இன்று சந்தித்ததாக தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் தற்காப்பு உறவையும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய, ஆசியானை மையமாகக் கொண்ட, மீள்திறன் உடைய வட்டாரத்திற்கான கடப்பாட்டையும் அவர்கள் மறுஉறுதிப்படுத்தியதாக இரு அமைச்சர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
ராணுவப் பயிற்சி மற்றும் ஆஸ்திரேலியாவில் பயிற்சித் தள மேம்பாடு குறித்த சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய உடன்பாட்டின்கீழ் பயிற்சித் தளங்களுக்கான கூட்டு மேம்பாடு முறைப்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கடந்த வியாழக்கிழமை இந்த உடன்பாட்டை முறைப்படி உறுதிப்படுத்தியதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
மத்திய, வடக்கு குவீன்ஸ்லாந்தில் பெரிய அளவிலான பயிற்சித் தளங்களை சிங்கப்பூர் ஆயுதப் படை பயன்படுத்தவும் ராணுவப் பயிற்சித் தளங்கள் மேம்படுத்தப்படுவதையும் இந்த உடன்பாடு வகை செய்கிறது.
1990ஆம் ஆண்டிலிருந்து ஷோல்வாட்டர் பே பயிற்சித் தளத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படை பயிற்சி பெற்று வந்ததன் முக்கிய மைல்கற்களைக் குறிக்கும் காணொளி ஒன்றையும் இரு நாட்டு தற்காப்பு அமைச்சர்கள் இன்று வெளியிட்டனர்.
"ஒவ்வோர் ஆண்டும் ஷோல்வாட்டர் பே பயிற்சித் தளத்தில் பல்லாயிரக்கணக்கான சிங்கப்பூர் ராணுவப் படை வீரர்களும் தேசிய சேவையாளர்களும் பயிற்சி செய்கின்றனர்," என்று இரு அமைச்சர்களும் கூறினர்.
ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் ராணுவப் படை வீரர்கள் பயிற்சி செய்ய வலுவான ஆதரவளிக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் டாக்டர் இங் நன்றி தெரிவித்தார்.

