பணிப்பெண் மானபங்கம்; இந்திய நாட்டவருக்கு ஈராண்டு சிறை, பிரம்படிகள்

பணிப்பெண் மானபங்கம்; இந்திய நாட்டவருக்கு ஈராண்டு சிறை, பிரம்படிகள்

2 mins read
dcf93fbe-b122-42a4-ab2f-1f4f6c312409
சிங்கப்பூர் நிரந்தரவாசியான 44 வயது சேது செல்வராஜ்,  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி இரவு 8 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் காப்பிக் கடையில் இருந்தபோது 37 வயது மாது ஒருவரைக் கண்டார். படம்: சாவ் பாவ் நாளிதழ் -

பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட இந்திய நாட்டவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதித்து நேற்று (டிசம்பர் 15) தீர்ப்பளிக்கப்பட்டது.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான 44 வயது சேது செல்வராஜ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி இரவு 8 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் காப்பிக் கடையில் இருந்தபோது 37 வயது மாது ஒருவரைக் கண்டார்.

இந்தோனீசிய பணிப்பெண்ணான அவர், பெட்டிர் ரோட்டில் இருக்கும் தம்முடைய முதலாளியின் வீட்டை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அந்தப் பெண்ணைத் தொடர்ந்து சென்ற சேது, அவரது பெயரையும் கைபேசி எண்ணையும் கேட்டார்.

தம் பெயரைக் கூறிய அம்மாது, தம்மிடம் கைபேசி இல்லை என்று கூறிவிட்டு தொடர்ந்து நடக்கத் தொடங்கினார்.

முதலாளியின் வீடு இருந்த புளோக்கின் வெற்றுத் தளத்தில் கீழே நடந்து சென்றபோது அந்தப் பெண்ணின் கையைப் பிடித்ததுடன், அந்தப் பெண்ணைத் தொடர்ந்து நடக்க விடாமல் தடுத்தார் சேது. அவரிடமிருந்து விடுபட்டு படிக்கட்டு வழியாக ஏறிய அப்பெண்ணைத் தொடர்ந்த சேது, படிக்கட்டு தளத்தில் அவரை நகரவிடாமல் பிடித்துக்கொண்டதாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் இட்ட கூச்சல் காதில் விழுந்ததால், அந்தப் பகுதியில் இருந்த மூத்த காவல் அதிகாரி ஒருவர் படிக்கட்டு தளத்துக்குச் சென்று பார்த்தார்.

அதனைத் தொடர்ந்து சேது கைது செய்யப்பட்டார்.

"எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருக்கும் இல்லப் பணிப்பெண்களுக்கு இத்தகைய பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பது முக்கியம்," என்று மாவட்ட நீதிபதி மார்வின் பே நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பின்போது தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் பொருட்டு நடப்பில் இருந்த கட்டுப்பாடுகளை கடந்த ஏப்ரல் மாதம் மீறியதற்காக கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு 13 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மானபங்க குற்றத்துக்காக சேதுவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, பிரம்படிகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்