சிங்கப்பூரில் 2வது ஆய்வு மையத்தை அமைக்கும் 'ஸூம்'; நூற்றுக்கணக்கில் பொறியியல் வேலைகள்

சிங்கப்பூரில் 2வது ஆய்வு மையத்தை அமைக்கும் 'ஸூம்'; நூற்றுக்கணக்கில் பொறியியல் வேலைகள்

1 mins read
ee0824ac-7f83-437e-8aa5-719e6851b6a0
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஏஎஃப்பி -

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான 'ஸூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்', சிங்கப்பூரில் இரண்டாவது ஆய்வு, உருவாக்க மையத்தைத் திறக்கவிருக்கிறது.

அம்மையத்திற்காக நூற்றுக்கணக்கில் முக்கிய பொறியியல் பணியாளர்கள் வேலையில் அமர்த்தப்படுவர் என்று அந்நிறுவனம் ஓர் அறிக்கை வாயிலாக இன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஈராண்டுகளாகச் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஸூம் நிறுவனம், இங்குள்ள தனது தரவு மையத்தின் கொள்ளளவையும் இரட்டிப்பாக்க இருக்கிறது.

'தனித்தன்மை வாய்ந்த பொறியியல் திறனாளர்களுக்காக' சிங்கப்பூரைத் தேர்வுசெய்துள்ள ஸூம் நிறுவனம், கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் போக்கு குறையத் தொடங்கியுள்ளதால் அலுவலகத்திற்கான இடத்தைத் தேடவிருப்பதாகக் கூறியுள்ளது.

"தொழில்செய்ய உகந்த, நிறுவனம் தொடங்குவதற்குத் தோழமைமிக்க நாடுகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் திகழ்கிறது. அத்துடன், தனித்திறமை கொண்ட திறனாளர்கள், வலுவான உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் பரந்த அளவில் ஈடுபாடு கொள்ள சிங்கப்பூர் மிகச் சரியான நுழைவாயிலாக இருக்கிறது," என்று ஸூம் நிறுவனத்தின் தயாரிப்பு, பொறியியல் பிரிவுத் தலைவர் வேல்சாமி சங்கர்லிங்கம் சொன்னார்.

"உயர்கல்வி பெற்ற சிங்கப்பூர் பொறியியல் திறனாளர்களை முடிந்த அளவு பயன்படுத்திக்கொள்ளும் விதமாக, உடனடியாக ஆள்சேர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அனைத்துலக அளவில் ஸூம் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி காண, சிங்கப்பூரில் அமையும் புதிய ஆய்வு, உருவாக்க மையமும் தரவு மையமும் மிக முக்கிய பங்காற்றும்," என்றும் திரு சங்கர்லிங்கம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்