உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 83ல் அமைந்திருக்கும் புளோக் 834ன் ஆறாவது மாடியில் ஊழியர் ஒருவர் சுவரில் பொருத்தப்பட்ட கம்பியின் விளிம்பில் அமர்ந்து குளிர் சாதனப் பெட்டியைப் பொருத்தியதன் தொடர்பில் மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 14) காலை 11 மணியளவில் ஊழியர் அவ்வாறு பணிபுரிந்ததாகக் குறிப்பிட்ட ஸ்டோம்ப் வாசகர், ஊழியரின் பாதுகாப்பு தொடர்பான அக்கறையைப் பகிர்ந்துகொண்டார்.
பாதுகாப்புக்கான கவசம் எதுவும் அணியாமல் அந்த ஊழியர் பணிபுரிந்து கொண்டிருந்ததை அந்த வாசகர் சுட்டிக் காட்டினார்.
ஊழியர் மிகவும் ஆபத்தான நிலையில் பணிபுரிந்து கொண்டிருந்ததாகக் கூறிய அவர், இத்தகைய பணிகளில் ஈடுபடும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தேவை என்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்திருப்பதாகவும் அதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளைக் கண்டால் SnapSAFE என்ற கைபேசிச் செயலி வழியாகத் தெரிவிக்கும்படி பொதுமக்களை அமைச்சு கேட்டுக்கொண்டது.

