வழக்கநிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; உயர்நிலை 5க்கு 78% மாணவர்கள் தகுதி

வழக்கநிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; உயர்நிலை 5க்கு 78% மாணவர்கள் தகுதி

2 mins read
e8c0fe28-2db7-4190-834c-ee3b011cfc86
யூயிங் உயர்நிலைப் பள்ளியில் வழக்கநிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) தேர்வு எழுதிய மாணவர்களில் 78 விழுக்காட்டினர் உயர்நிலை ஐந்தாம் வகுப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

2009 முதல் வழக்கநிலைத் தேர்வுகளில் மாணவர்களின் தலைசிறந்த செயல்திறன் இதுதான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 2020ல் வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) தேர்வு எழுதிய மாணவர்களில் 77.7 விழுக்காட்டினர் அடுத்த ஆண்டு சாதாரண நிலைக்கு (ஓ நிலை) முன்னேறத் தகுதி பெற்று இருக்கிறார்கள்.

உயர்நிலை 4 வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) மாணவர்கள் 9,321 பேரில் சுமார் 7,240 பேர் ஆங்கிலம், கணிதம் மற்றும் சிறப்பான மூன்று பாடங்களில் 19 புள்ளிக்கு மேல் போகாமல் மொத்த மதிப்பெண்களைப் பெற்று உள்ளனர்.

இந்த ஐந்து பாட மதிப்பெண் தொகுப்பில் பயன்படுத்தப்படும் எல்லாப் பாடங்களிலும் குறைந்தபட்சத் தரம் 5ஐ அவர்கள் பெற்று இருக்கிறார்கள்.

வழக்கநிலை (தொழிற்கல்வி) தேர்வு எழுதிய மாணவர்களும் முந்தைய ஆண்டு மாணவர்களைவிட இந்த ஆண்டு சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளதாகம் கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் தெரிவித்துள்ளன.

தேர்வு எழுதிய 4,156 பேரில் 98.5 விழுக்காட்டினர் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இதுவே ஆக அதிக தேர்ச்சி விகிதம் ஆகும். இந்த ஆண்டு தேர்வு எழுதிய ஏறக்குறைய ஒவ்வொரு வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) மாணவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆறு ஆண்டு காலத்தில் ஆக அதிகம்.

இதோடு, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) மாணவர்களில் 43.2 விழுக்காட்டினர் இந்த ஆண்டு 'ஓ' நிலைப் பாடங்களிலும் தேர்வு எழுதினர். இந்த முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும்.

மாணவர்களின் வழக்கநிலை மற்றும் பள்ளி அடிப்படையிலான சாதாரண நிலை பூர்வாங்கத் தேர்வின் முடிவுகளை ஒன்று சேர்த்து பரிசீலித்து அதன் அடிப்படையில் இந்த மாணவர்கள் உயர்நிலை 5 அல்லது உயர்நிலைக்குப் பிந்தைய படிப்புகளுக்கான தகுதியைப் பள்ளிக்கூடங்கள் முடிவு செய்யும்.

குறிப்புச் சொற்கள்