கொவிட்-19 கிருமித்தொற்றைத் தவிர்த்துக்கொள்ள தேவையான எதிர்ப்பு ஆற்றலைக் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டுமானால் மக்களில் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பு ஊசி போட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தலைமை அறிவியல் அறிஞர் பேராசிரியர் டான் சோர்ஹ் சுவான் தெரிவித்து இருக்கிறார்.
மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களிடம் கொவிட்-19 எதிர்ப்பு ஆற்றல் இருக்குமானால் அந்த ஆற்றல் இல்லாத மற்றவர்களைக் கிருமி தொற்றும் ஆபத்து மறைமுகமாக குறைக்கப்பட்டுவிடும் என்று அவர் புதன்கிழமை விளக்கினார்.
மக்கள்தொகையில் தடுப்பூசி அளவு பொதுவாக ஏறக்குறைய 60% முதல் 70% வரை என்றாலும் குறைந்தபட்சம் 80 விழுக்காட்டு மக்களுக்குத் தடுப்பூசியைப் போடுவது விவேகமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசியின் ஆற்றல் 90% இருக்கும் என்றும் மக்கள் தொகையில் 80%க்கு அந்த ஊசி போடப்பட்டு இருக்கிறது என்றும் வைத்துக் கொண்டால், மக்களில் 72 விழுக்காட்டினரிடம் நோய்த் தடுப்பாற்றல் ஏற்பட்டு இருக்கும் என பேராசிரியர் டான் விளக்கினார்.
பொருத்தமான ஒவ்வொருவரும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார். ஊசி போட்டுக்கொண்டால் அது எல்லாருக்கும் பாதுகாப்பானது என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் தடுப்பூசி, இந்த ஆண்டு முடிவதற்குள் சிங்கப்பூருக்கு வரும் என்று பிரதமர் லீ சியன் லூங் அண்மையில் அறிவித்து இருந்தார்.
அதையடுத்து சுகாதாரப் பராமரிப்பு மற்றும் முன்களப் பணியாளர்கள், முதியோர்கள், நோயாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர், அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டு வாக்கில் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்றும் உறுதி கூறினார்.
மூத்தவர்களில் 60 வயது மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்கள் அடங்குவர் என்று பேராசிரியர் டான் விளக்கினார். இந்த வயதுப் பிரிவினர்கள் ஏறக்குறைய 1 மில்லியன் பேர் இருக்கிறார்கள்.
முதியவர்களுக்கும் பல சுகாதாரப் பிரச்சினைகளைக் கொண்ட முதியவர்களுக்கும் தடுப்பூசி போட்டால் அந்த வயது பிரிவினரிடையே தொற்று மிகவும் குறையும் என்று பேராசிரியர் டான் கூறினார்.
சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் இத்தகைய ஊழியர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து குறையும். இவர்களுக்கு அப்பாலும் மொத்த மக்கள்தொகையில் அதிக விகிதாச்சாரத்தில் தடுப்பூசி போடப்பட்டால் பெரிய அளவில் கிருமித்தொற்று ஏற்படுவது பெரிதும் குறைக்கப்பட்டுவிடும் என்று பேரா சிரியர் தெரிவித்தார்.

