சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் அடுத்த தலைமுறை 'அஸ்டர் 30 ஏவுகணை' ஆகஸ்ட் முதல் முழுமூச்சாகப் பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளது.
அது ஆகாயப் படையின் கட்டமைப்புடன் கூடிய தீவு தழுவிய ஆகாய தற்காப்பு முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த முறை பலதரப்பட்ட மிரட்டல்களைச் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலுடன் திகழ்கிறது.
புதிய ஏவுகணைப் பயிற்சியை லிம் சூ காங் முகாம் IIல் பார்வையிட்ட தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், இந்தத் தற்காப்பு முறையின் பாதுகாப்பு ஆற்றலில் இன்றைய நாள் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறினார்.
இந்தப் புதிய ஏவுகணைச் சாதனம் தொலைதூரத்தில் இருக்கும் இலக்குகளைக் கண்டறிந்து அவற்றைச் சமாளிக்கக்கூடியது.
அதேவேளையில், மனித ஆற்றல் அவ்வளவாக இதற்குத் தேவைப்படாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.