கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பாலர் பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளிகளிலும் புதிய கல்வியாண்டு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. எனினும், தொடக்கநிலை ஒன்று, பாலர் வகுப்பு ஒன்று மாணவர்கள் மட்டுமே அந்நாளில் பள்ளிக்குச் செல்வர்.
பாலர் வகுப்பு இரண்டிலும் தொடக்கநிலை இரண்டு முதல் ஆறு வரையிலும் பயிலும் மாணவர்களுக்குக் கூடுதலாக ஒரு விடுமுறை நாளாக அன்று அமைந்திடும். அவர்கள் ஜனவரி 5ஆம் தேதி பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.
சிறப்புக் கல்விப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் ஜனவரி 4 அன்று திறக்கும். தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா கழகம் ஆகியவை ஜனவரி 11ஆம் தேதியன்று திறக்கும் என்று அமைச்சு தெரிவித்தது. வெவ்வேறு நாட்களில் பள்ளி தொடங்குவதால் இளம் பிள்ளைகளைப் புதிய பள்ளிச் சூழலுக்கு வரவேற்பதில் மேலும் அதிகக் கவனம் செலுத்த முடியும் என்றும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் சரியாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்ய முடியும் என்றும் கல்வி அமைச்சு கூறியது.
"தேவை ஏற்பட்டால், பெற்றோரில் ஒருவர் மட்டும் தங்களின் தொடக்கநிலை ஒன்று/பாலர் நிலை ஒன்று படிக்கும் பிள்ளைக்குத் துணையாக இருக்கலாம். புதிய சூழலில் பழகிக்கொள்ள முடிவதுடன் அனைத்து மாணவர்கள் பாதுகாப்பாகவும் இருப்பர்," என்றது அமைச்சு.
தொடக்கநிலை ஒன்று மாணவர்களுக்குப் புதிய பள்ளிச் சூழலுக்குப் பழகிக்கொள்ள பல அம்சங்கள் இருப்பதால் அவர்களுக்கு முதலில் பள்ளி தொடங்குவது சிறப்பு என்று சில பெற்றோர்கூறினர்.
மற்ற நிலைகளுக்குக் கூடுதலாக ஒரு விடுமுறை நாள் கிடைத்திருப்பதால் பள்ளிக்குத் தயாராக மேலும் ஒரு நாள் கிடைத்துள்ளது என்பது வேறு சில பெற்றோரின் எண்ணம்.
பெரும்பாலான இணைப்பாட நடவடிக்கைகள், பள்ளி நடவடிக்கைகள் ஆகியவையும் மீண்டும் தொடங்கவுள்ளன.
இருப்பினும், கிருமி பரவும் அபாயம் அதிகமுள்ள நடவடிக்கைகள் நடைபெறாது. அத்துடன் மாணவர்கள் சிறு குழுக்களாக மட்டுமே நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
இதற்கிடையே, பாலர் பள்ளிகளில் இயங்கி வரும் பராமரிப்பு நிலையங்கள், ஜனவரி 4ஆம் தேதியன்று பாலர் நிலை இரண்டு மாணவர்களுக்குத் திறந்திருக்காது என்றும் அமைச்சு தெரிவித்தது.
அன்று பாலர் நிலை ஒன்று மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் பராமரிப்பு நிலையத்திற்கு வருகை அளிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், தொடக்கப்பள்ளிகளில் இயங்கி வரும் மாணவர் பராமரிப்பு நிலையங்கள் ஜனவரி 4 முதல் அனைத்து நிலைகளில் படிக்கும் மாணவர்களுக்கும் திறக்கப்படும்.
பள்ளி திறந்ததும் மாணவர்கள் தங்களின் 'டிரேஸ்டுகெதர்' சாதனங்களை வைத்திருப்பது கட்டாயமல்ல. ஆனால், நாளடைவில் சாதனங்களின் விநியோகம் முடிந்தவுடன் சாதனங்களின் பயன்பாடு பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும். மாணவர்களைக் கண்காணிப்பது, உடல் வெப்பநிலையைச் சோதிப்பது, உயர் சுகாதாரத் தரத்தைக் கட்டிக்காப்பது, பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்.

