விலங்கு சாரா பால் பொருள் புரதச் சத்து நிறைந்த பொருட்களை தயாரிக்கும் 'பெர்ஃபெக்ட் டே' நிறுவனமும் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுக் கழகமான 'ஏ*ஸ்டார்' அமைப்பும் இணைந்து சிங்கப்பூரில் ஆய்வுக்கூடம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் செயல்பட உள்ள இந்த ஆய்வுக்கூடம், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை தலைமையகமாகக் கொண்டுள்ள 'பெர்ஃபெக்ட் டே' நிறுவனத்தின் உலகளாவிய ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவும்.
இதில் அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பால், சீஸ் எனப்படும் பாலாைடக்கட்டி, ஐஸ்கிரீம் பொருட்கள் தொடர்பில் அவற்றின் நடைமுறைகள், சரியாய் இருப்பதுடன் ஒருநிலைத்தன்மையுடன் இருக்கின்றனவா என்பதை இந்த ஆய்வுக்கூடம் மூலம் உறுதி செய்யப்படும்.
அதேசமயம், பெர்ஃபெக்ட் டே நிறுவனம் சிங்கப்பூரில் தாவர இன புரதச் சத்துப் பொருட்களை உற்பத்தி செய்ய ஏதுவாக ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள், பொறியாளர்கள் ஆகியோருக்கு அதற்கேற்ற பயிற்சியையும் வழங்கும்.
'பெர்ஃபெக்ட் டே' நிறுவனம் தற்பொழுது 200 ஊழியர்களைக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் இதில் பத்தில் ஒரு பங்கு ஊழியர்கள் பணிபுரிவர் என்று 'பெர்ஃபெக்ட் டே' நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு பெருமாள் காந்தி கூறியுள்ளார்.
'பெர்ஃபெக்ட் டே' நிறுவனத்தின் ஆய்வுக்கூடம் பற்றி தெரிந்து கொள்ள 'ஏ*ஸ்டார்' அமைப்புக்கு நேற்று வருகையளித்த வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், உலகம் உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள சிக்கனமான, புத்தாக்க வழிகளை ஆராயும்போது, வேளாண்-உணவு தொழில்நுட்பத் துறை சிங்கப்பூர் பொருளியலில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறினார்.
கொரோனா கொள்ளைநோய் உணவு விநியோகச் சங்கிலித் தொடரை சீரழித்துள்ள நிலையில், இந்தத் துறை நம்பிக்கை ஒளியாகத் திகழ்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூரிலும் இந்த வட்டார நாடுகளிலும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய உணவுத் துறை வளர்ச்சியடையும் வாய்ப்புகள் சிங்கப்பூரில் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் விளக்கினார்.
இதற்கு உதாரணமாக, ஆண்டொன்றுக்கு 500 டன் காய்கறிகளை உற்பத்தி செய்யும் ஜெர்மனியைச் சேர்ந்த, கட்டட உள் பகுதியில் செங்குத்தான வேளாண் முறையைக் கடைப்பிடிக்கும் நிறுவனமான 'ஃபர்ம் அண்ட் எவர்' சிங்கப்பூரில் பண்ணை ஒன்றை யும் உலகளாவிய ஆய்வுக்கூடம் ஒன்றையும் ஏற்படுத்த உள்ளதை அமைச்சர் சுட்டினார்.
"பதனிடும் வசதிகளையும் சாத னங்களையும் உருவாக்கும் 'புஹ்லர்' நிறுவனமும் 'ஜிவாவுடன்' நறுமணத் திரவியங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமும் இணைந்து சிங்கப்பூரின் உணவு புத்தாக்க நிலையத்தை அமைத்து, உணவு பதனிடும் நிறுவ னங்களுடன் சேர்ந்து பணியாற்றும்," என்றும் திரு சான் சுட்டினார்.

