சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 22) நண்பகல் நிலவரப்படி புதிதாக 29 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்கள் சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் அவருக்கு வீட்டில் தங்கியிருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்தது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிலிருந்து நால்வர் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.
23 பேர் தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள். அந்த 23 பேரில் 21 பேர் இல்லப் பணிப் பெண்கள்.
இதற்கிடையே, சமூக அளவிலோ அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாருக்கும் தொற்று இல்லை என்றும் அமைச்சு கூறியது. இன்று பதிவான சம்பவங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 58,461.
நேற்று அறிவிக்கப்பட்ட ஒரே சமூக அளவிலான கிருமித்தொற்று சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் சொகுசுக் கப்பலில் பயணம் செய்வதற்கு முன் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட சிங்கப்பூர் பெண்மணி என்று கூறப்பட்டது.
இம்மாதம் 14ஆம் தேதி அந்த 39 வயது பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மற்ற இரு குடும்பங்களுடன் சிங்கப்பூரின் தெற்குத் தீவுகளுக்குச் சுற்றுலா சென்றனர். அந்தக் குழுவில் 12 பேர் இருந்தனர்.
சிங்கப்பூரின் இரண்டாம் கட்டத் தளர்வு நடவடிக்கையில் அறிவிக்கப்பட்ட குழுவுக்கு ஐவர் என்ற விதிமுறைக்கு மாறாக அக்குழுவில் ஏழு பேர் கூடுதலாக இருந்தனர்.
அவர்களிடையே பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் மீறப்பட்டதா என்று சுகாதார அமைச்சு விசாரித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறி முதலில் தென்படவில்லை. பரிசோதனையில் கிருமித்தொற்று உறுதியானதும் அவர் மருத்துவ வாகனம் மூலம் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இப்போது அவரிடம் 'சிரோலிஜி' பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. 'சிரோலிஜி' பரிசோதனை அவருக்கு இதற்கு முன் கிருமித்தொற்று இருந்ததா என்பதைக் கண்டறியும்.
அந்தப் பெண் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 93ல் வசிக்கிறார். 18 பூன் லே வேயில் உள்ள 'ருவிசிங் கெமிக்கல்' நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

