தம்மிடமிருந்து பிரிந்து சென்ற மனைவியைத் தாக்கியதற்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதற்கும் ஆடவர் ஒருவருக்கு எட்டு ஆண்டு, ஆறு மாதங்கள், மூன்று வாரச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
தமது பிள்ளைகள் பயிலும் தொடக்கப்பள்ளியில் அந்த 43 வயது சிங்கப்பூரர் இந்தக் குற்றத்தைப் புரிந்தார்.
குடும்ப விவகாரம் குறித்து சினங்கொண்ட அந்த ஆடவர் தொடக்கப்பள்ளியின் துணைத் தலைமையாசிரியர்களின் கண் முன் தமது மனைவியைக் குத்தினார்.
அந்த இரண்டு தலைமையாசிரியர்களும் பள்ளி ஆலோசகரும் அவரைத் தடுத்து அப்பெண்ணைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த ஆடவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே மணமுறிவு வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இந்தக் குற்றம் நிகழ்ந்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று தமது சகோதரரர்கள் இருவருடன் தமது பிள்ளைகளைக் காண அந்த ஆடவர் பள்ளிக்குச் சென்றார்.
தமது தந்தையைக் காண தமக்கு விருப்பமில்லை என்று அவரது மகள் பள்ளி ஆலோசகரிடம் தெரிவித்தார்,
நிலைமையைப் பற்றி ஆடவரின் மனைவியுடன் தொடர்புகொண்டு விளக்கினார் துணைத் தலைமையாசிரியர்.
பிள்ளைகளைப் பார்க்க தமது கணவரை அனுமதிக்க வேண்டாம் எனப் பிள்ளைகளின் தாயார் கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து, அவர் தலைமையாசிரியரின் அறையில் இருந்த தமது கணவரைக் காண சென்றார்.
அப்போது துணைத் தலைமையாசிரியர்களும் பள்ளி ஆலோசகர்களும் அங்கு இருந்தனர்.
"தலைமையாசிரியரின் அறையில் நடைபெற்ற உரையாடலின்போது தமது பிள்ளைகளின் நலனில் தமது கணவர் சிறிதளவும் பங்காற்றவில்லை என்ற குற்றச்சாட்டைப் பாதிக்கப்பட்ட பெண் முன்வைத்தார்.
"10வது மாடியிலிருந்து தமது மகளை வீச தமது கணவர் முயன்ற சம்பவத்தைப் பற்றி அவர் பேசினார்.
"இதைக் கேட்டு அந்த ஆடவர் ஆத்திரம் அடைந்தார். நாற்காலியிலிருந்து எழுந்த அவர், தமது மனைவி மீது பாய்ந்து அவரது தலையின் வலது பக்கத்தில் குத்தினார்," என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் உட்லண்ட்ஸ் பலதுறை மருந்தகத்துக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டார். அவரது தலையில் காயம் ஏற்பட்டிருந்தது.
தீர்ப்பளித்தபோது அந்த ஆடவருக்கு எதிராகப் பதிவான மற்ற குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
அவற்றில் பெரும்பாலானவை போதைப்பொருளுடன் தொடர்புடையவை.
கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் போதைப்பொருள் உட்கொண்டதை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
மனைவியைத் தாக்கிய குற்றத்துக்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக அவருக்கு 13 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அதிகபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
சம்பந்தப்பட்ட தம்பதியரின் 12 வயது மகன், 9 வயது மகள் ஆகியோரின் அடையாளத்தைக் காக்க தம்பதியரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் குடியிருப்புக் கட்டடத்தின் 10வது மாடியிலிருந்து தமது மகளை வீச அந்த ஆடவர் முயன்றதற்கான காரணம் பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

