சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 24) நண்பகல் நிலவரப்படி புதிதாக 13 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்கள் சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு வீட்டில் தங்கியிருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இதற்கிடையே, சமூக அளவிலோ அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாருக்கும் தொற்று இல்லை என்றும் அமைச்சு கூறியது.
இன்று பதிவான சம்பவங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 58,495.
கடந்த ஆகஸ்டில் பிரிட்டனில் படித்துக்கொண்டிருந்த 17 வயது சிங்கப்பூர் மாணவி, சிங்கப்பூருக்கு இம்மாதம் 6ஆம் தேதி திரும்பினார். தனிமைப்படுத்தலுக்கான வளாகத்தில் இருந்த அந்தப் பெண்ணுக்கு இம்மாதம் 8ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு தற்போது பிரிட்டனில் பரவிவரும் புதிய வடிவ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகைக் கிருமி வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்டுள்ளது.

